சென்னை:

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கு  மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே 5-ம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.


நாடு முழுவதும் நடக்கும் நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை நாடு முழுவதும் 15 லட்சத்து 19 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள். தமிழகத்தில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்.

நாடு முழுவதும் 154 மையங்களில் நீட் தேர்வு நடக்கிறது.  தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, சேலம், திருச்சி, தஞ்சாவூர், கரூர், நாமக்கல், வேலூர், திருநெல்வேலி, நாகர்கோவில் உள்ளிட்ட 14 நகரங்களில் நடக்கிறது.

தமிழ், ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட 11 மொழிகளில் நீட் தேர்வு நடக்கிறது. ஆங்கிலத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்த தமிழக மாணவர்களுக்கு முடிந்தவரை தமிழகத்திலும், கடைசி நேரத்தில் விண்ணப்பித்தவர்களுக்கு அருகில் உள்ள மாநிலத்திலும் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு முடிவுகள் ஜுன் 5-ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

நீட் தேர்வுக்கான கட்டுப்பாடுகள்

நீட் தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

தேர்வு தொடங்குவதற்கு 2 மணி நேரம் முன்பே தேர்வு மையங்கள் திறக்கப்படும்.

பிற்பகல் 1.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்துக்குள் அனுமதி இல்லை. அதனால், 1.15 மணிக்குள் தேர்வு மையத்துக்குள் சென்று அவரவர் இருக்கையில் அமரவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒரு இருக்கை ஒதுக்கப்பட்டு அதில் அவர்களின் தேர்வு பதிவு எண் ஒட்டப்பட்டு இருக்கும்.

பிற்பகல் 1.30 மணி முதல் 1.45 வரை தேர்வு குறித்த முக்கிய நடைமுறைகள் அறிவித்தல் மற்றும் ஹால் டிக்கெட் பரிசீலனை நடைபெறும்.

ஹால் டிக்கெட் இல்லாதவர்கள் எக் காரணத்தைக் கொண்டும் தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.

1.45 மணிக்கு விடைத்தாள் தொகுப்பு தரப்படும். 1.50 முதல் 2 மணி வரை தங்களைப் பற்றிய தகவல்களை விடைத்தாள் தொகுப்பில் பதிவு செய்ய வேண்டும்.

விடைத்தாளில் 2 மணி முதல் 5 மணி வரை விடைகளை எழுதவேண்டும்.

5 மணிக்கு முன்னதாக யாரும் தேர்வு அறையை விட்டு வெளியேறக் கூடாது.

ஆள் மாறாட்டத்தை தடுக்க வருகைப் பதிவுத் தாளில் மாணவர்கள் தங்களது கைரேகையை பதிவு செய்ய வேண்டும்.

தேர்வு எழுத பால் பாயிண்ட் பேனா தேர்வு மையத்தில் வழங்கப்படும்.

ஜியோ மெட்ரிக்பாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர், ஸ்கேல், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை எடுத்துவர அனுமதி இல்லை.

மொபைல் போன், புளுடூத், பென்டிரைவ், கைக் கடிகாரம், கை கேமிரா, காதணிகள், வளையல் போன்ற ஆபரணங்களுக்கு அனுமதி இல்லை.

மென்மையான நிறத்தில் ஆடை அணிந்திருக்க வேண்டும். அரைக் கை சட்டைக்கு அனுமதி உண்டு. முழுக்கை சட்டை அணியக் கூடாது.

மத சார்பான அதிகம் உடலை மறைக்கும் ஆடைகள் அணிபவர்கள் ஒரு மணி நேரத்துக்கு முன்பு தேர்வு அறைக்கு வந்து ஆசிரியைகளின் சோதனைக்கு உட்பட வேண்டும்.

தேர்வு மையத்துக்குள் ஷு அணியக் கூடாது. செருப்பு மட்டும் அனுமதிக்கப்படும். ஹைஹீல்ஸ் செருப்பு அணியக் கூடாது.

ஆண்கள்

ஆண்கள் சாதாரண டி சர்ட் அல்லது சட்டை அணிய வேண்டும். அதில் ஜிப், பாக்கெட், பெரிய பட்டன்கள் அல்லது பெரிய எம்ப்ராய்டரி போட்டு இருக்கக் கூடாது.

குர்தா பைஜாமா அணிந்து வரக்கூடாது. பேண்ட் மட்டுமே அணிய வேண்டும்.

பெண்கள்

பெண்கள் எம்ப்ராய்டரி போட்ட ஆடைகள், பூப்போட்ட ஆடைக¬ள், பட்டன்கள் வைத்த ஆடைகளை அணிந்து வரக்கூடாது. அரைக் கை சட்டை மட்டுமே அணிய வேண்டும். பெண்கள் சல்வார் மற்றும் பேண்ட் அணிந்து வரலாம்.

நகைகள் அணிந்து வரக்கூடாது. தோடு, பதக்கம், மோதிரம், மூக்குத்தி, நெக்லஸ் அல்லது மற்ற எந்தவித உலோக ஆபரணங்களும் அணியக் கூடாது.

இவ்வாறு நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.