பெருந்துறை:
தமிழகத்தில் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று தமிழக கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழ்வழி கல்வி பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள், சிபிஎஸ்இ கல்வி வாரியம் நடத்தும் மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் 420 இடங்களில் பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் 25ந்தேதி அதற்காக தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டன.
இதையடுத்து முதற்கட்டமாக 100 மையங்களை கடந்த ஆண்டு நவம்பர் 13ந்தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.
இந்நிலையில் நீட் பயிற்சி மேற்கொள்ள விரும்பும் மாணவர்களுக்கு 3 தனியார் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறி உள்ளார்.
பெருந்துறையில் உண்டு உறைவிட பயிற்சி மைய துவக்க விழாவில் பேசிய அவர், தமிழகம், ஆந்திரா, ராஜஸ்தான் நிறுவனங்கள் மூலம் தரமான பயிற்சி தரப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய பாடத்திட்டங்களுக்கேற் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
ஏற்கனவே, பிப்ரவரி 5ந்தேதி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், மார்ச் மாதம் முதல் நீட் பயிற்சி தொடங்கும் என அறிவித்த நிலையில், தற்போது (ஏப்ரல் 9ந்தேதி) 3 நிறுவனங்கள் மூலம் பயிற்சி நடைபெறும் என சொல்லியிருப்பது பெற்றோர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
நீட் தேர்வு மே மாதம் 6ந்தேதி நடைபெற உள்ள நிலையில், தமிழக அமைச்சர் பயிற்சி தரப்படும் என்று கூ………..றி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.