நீட் தேர்வு குழப்பத்தினால் மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்டதைப்போலவே, கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி வேலூரில் ஒரு தற்கொலை சோகம் நிகழ்ந்தது.  இந்த சம்பவத்தில் உயிரை விட்டவர் மாணவியின் தாய்.

இந்த நிலையில், “தற்போது இந்த விவகராத்தை நீட் தேர்வுக்கு ஆதரவாக.. அதாவது, நீட் தேர்வு வராமல் போய்விடுமோ என்ற அச்சத்தில்… அந்த பெண்மணி தற்கொலை செய்துகொண்டதாக பாஜகவைச்சேர்ந்த நாராயணன் திசை திருப்பி முகநூலில் பிரச்சாரம் செய்துவருகிறார். இவரைப்போலவே பாஜகவினர் பலரும் அந்த மரணத்தைத் திசை திருப்பிப் பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள்” என்று நெட்டிசன்கள் பலரும் பதிவிட ஆரம்பித்துள்ளனர்.

நித்தியலட்சுமி

முதலில் அந்த பெண்மணியின் மரணம் குறித்து பார்ப்போம்.

வேலூர் அருகே பாகாயம் அண்ணா நகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியம். இவருடைய மனைவி நித்யலட்சுமி. கண்ணமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளியில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இவர்களது மகள் அபிதா,  பிளஸ் 2 முடித்துவிட்டு மருத்துவ சேர்க்கைக்காக காத்திருக்கிறார்.

நித்யலட்சுமிக்கு தனது மகள் அபிதாமதியை மருத்துவராக்க வேண்டும் என்பது கனவு. இந்த நிலையில், அபிதா  +2 தேர்வில் 1124 மதிப்பெண் பெற்று தேறியிருந்தார்.

ஆனால் நீட் பொது நுழைவுத்தேர்வில் 224 மதிப்பெண் மட்டுமே எடுத்திருந்தார்.

“நீட் குறித்து மத்திய மாநில அரசுகள் செய்த குழப்பமு, நாடு முழுதும் ஒரே தேர்வு என்று சொல்லிவிட்டு மாநிலத்துக்கு மாநிலம் வேறுபட்ட வினாத்தாள் அளிக்கப்பட்டது போன்ற குளறுபடிகளும் நடந்தன. இதனாலேயே நன்றாக படித்து ப்ளஸ் டூவில் நல்ல மதிப்பெண் பெற்ற பல மாணவர்கள் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற முடியாமல் போனது” என்று பரவலாக புகார் எழுந்தது.

இந்த சூழலில், தனது மகள் அபிதா நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்காதோ என்று விரக்தி அடைந்த நித்தயலட்சுமி தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து இன்று பாஜகவின் நாராயணனன் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு எழுதியிருக்கிறார்.

பாஜக நாராயணனின் பதிவு

அதில், “தற்கொலைக்கு சாதி இல்லை. நீட் தேர்வில் 212 மதிப்பெண் பெற்ற தன் மகள் மருத்துவ படிப்பில் சேர்ந்து விடுவாள் என்று எண்ணிக்கொண்டிருந்த ஒரு தாய், நீட் வராமல் போய் விடுமோ என்ற அச்சத்தில் வேலூரில் 22 ஆகஸ்ட் அன்று தற்கொலை செய்து கொண்டார். ஆனால் ஊடகங்கள் அதை உதாசீனப்படுத்தி விட்டது. மாநில பாடத்திட்டத்தில் அதிக மதிப்பெண் பெற்ற அனிதா என்ற பெண் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவ படிப்பில் சேர முடியாமல் போனதால் தற்கொலை செய்து கொண்டார். ஆனால் இவை இரண்டையும் தொடர்பு படுத்த கூடாது என்றும் அப்படி சொல்வது விஷமத்தனமானது என்றும் சொல்வது விஷயத்தோடு தான் என்றே எடுத்துக்கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது “நீட் தேர்வுக்கு ஆதரவாக இப்பெண்மணி தற்கொலை செய்துகொண்டார்” என்று நாராயணன் குறிப்பிட்டிருக்கிறார். இது போல மேலும் சில பாஜகவினர் சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள்.

இந்த நிலையில் சமூகவலைதளங்களில் இக்கருத்துக்களுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

“பாஜகவின் நாராயணன் உட்பட சிலர் வேலூர் நித்தியலட்சுமி, நீட் தேர்வுக்கு ஆதரவாக தற்கொலை செய்துகொண்டதாக சமூகவலைதளங்களில் எழுதி வருகிறார்கள். இது உண்மைக்கு புறம்பானது. தனது மகள் நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றதால் மருத்து கல்லூரியில் இடம் கிடைக்காதோ என்ற விரக்தியிலேயே அவர் தற்கொலை செய்துகொண்டார்.

தற்கொலை என்பதை ஏற்க முடியாதுதான். ஆனால் ஒருவரது மரணத்தில் பாஜகவினர் பொய்யைப் புகுத்தி திசை திருப்புவது  மிக தரம் தாழ்ந்தது” என்று நெட்டிசன்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.