நீட்  குழப்படிகளை எதிர்த்து தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதா வீட்டருகில் திரைப்பட இயக்குநர் வ.கவுதமன் போராட்டம் நடத்தி வருகிறார்.
போராட்டம் நடத்திவருகிறார்.

நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தோ்வாக நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.  தமிழகத்திற்கு கடந்த ஆண்டு மட்டும் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது. இந்த ஆண்டு நீட் தேர்வு அடிப்படையில்தான் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழக அரசு ஏற்கனவே நடைபெற்றுவந்த மதிப்பெண் அடிப்படையில்தான் சேர்க்கை தொடரும் என்று கூறிவந்தது.

மேலும் சட்டசபையில் சிறப்பு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அதை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை.

ஆனால் இந்த ஒரு ஆண்டு மட்டும் விலக்கு வழங்க வலியுறுத்தி அவசர சட்டம் நிறைவேற்றினால் அதற்கு அனுமதி பெற்று தரலாம் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கோவையில் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் அவசர சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசின் அனுமதிக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. தமிழக அமைச்சர்களும் டில்லியில் முகாமிட்டு பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை சந்தித்து வந்தனர்.


ஆனால், திடீரென மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. மத்திய அரசு அனுமதி அளிக்காததால் உச்சநீதிமன்றம் நீட் தேர்வு அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையை நடத்தும்படி கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.

இதனால் பாதிக்கப்பட்ட அரியலூரை சேர்ந்த அனிதா என்ற மாணவி நேற்று தற்கொலை செய்து கொண்டார். முன்னதாக நீட் குழப்படிகளை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்போராட்டம் நடத்தினார் அனிதா.

மிக முயற்சி எடுத்து படித்து பிளஸ்2 தேர்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றார் அனிதா.

மதிப்பெண் அடிப்படையில் அவர் மருத்துவ கட்-ஆப் மார்க் 196.5 பெற்றிருந்தார். ஆனால் `நீட்’ தேர்வில் 700 மதிப்பெண்ணுக்கு அவர் 86 மதிப்பெண் மட்டுமே பெற்று இருந்தார். இதனால் நீட் தேர்வு அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடந்தால் தனது மருத்துவர் கனவு தகர்ந்துவிட்டதே என்ற சோகத்தில் கடந்த சில நாட்களாக யாரிடமும் பேசாமல் விரக்தியில் இருந்து வந்தார். நேற்று வழக்கம்போல் அவரது பெற்றோர், மற்றும் அண்ணன்கள் வயலுக்கு சென்றிருந்தார்கள்.  வீட்டில் அனிதா மட்டும் தனியாக இருந்தார். அப்போது  சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார் அனிதா.

இந்நிலையில்  இயக்குநர் கவுதமன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.

அஞ்சலி செலுத்திய கவுதமன் அனிதாவின் வீட்டருகே போராட்டம் நடத்தி வருகிறார். நூறுக்கும் மேற்பட்டவா்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.