கும்பகோனம் அருகே காரில் கடத்தப்பட்ட இரண்டாயிரம் மதுபாட்டில்களை காவல்துறையினர் துரத்திச் சென்று பறிமுதல் செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த திருப்பனந்தாள் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை போலீசார் மறித்துள்ளனர். ஆனால் அந்த கார் நிற்காமல் வேகமாக சென்றுள்ளது. பின்னர், திருப்பனந்தாள் காவலர்கள் தரப்பில், பந்தநல்லூர் ஆய்வாளர் சுகுணாவிற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் பந்தநல்லூரில் இருந்து சக காவலர்களுடன் திருப்பனந்தாள் நோக்கி வந்த அவர், நெய்குப்பம் என்கிற இடத்தில் காவலர்கள் தனக்கு அளித்த தகவலை கொண்ட கார் வந்துகொண்டிருந்ததை கவனித்துள்ளார்.

அதன் பின்னர் தனது ஜீப்பை நிறுத்திவிட்டு, காரை நிறுத்தியுள்ளார். காவலர்களை பார்த்ததும்,  கார் ஓட்டிவந்த டிரைவர் தப்பித்து ஓட, காரை காவல்துறையினர் சோதனையிட்டனர். அப்போது புதுச்சேரியில் இருந்து 2,112 மதுபாட்டில்கள் கடத்திவரப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து மதுபாட்டில்களை காரோடு பறிமுதல் செய்த காவல்துறையினர், 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய இந்த சரக்கு பாட்டில்களை யார் கடத்தினார்கள் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.