டெல்லி:

ஜிஎஸ்டி கவுன்சிலில் சமீபத்திய சில முடிவுகளால் ஒத்துழையாமை இயக்கம் நடத்த மத்திய கலால் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

இதன் ஆரம்பமாக ஊழியர்கள் சங்கத்தினர் கடந்த வெள்ளிக்கிழமை சர்வதேச சுங்க தினத்தை கொண்டாடவில்லை. வரும் 30ம் தேதி கறுப்பு பேட்ஜ் அணிந்து, கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து சங்கத்தினர் கூறுகையில்,

கடந்த 16ம் தேதி மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி தலைமையிலான ஜிஎஸ்டி குழு கூட்டம் நடந்தது. இதில் 12 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ரூ. 1.5 கோடி வரையிலான வரி செலுத்துவோரையும் மாநில அரசுகள் நிர்வகிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மூலம் இந்த நூற்றாணடின் மிகப்பெரிய வரி விதிப்பு திட்டத்தின் மூலமான வருவாய் மத்திய அரசுக்கு வருவது தடைபடும். தேச நலனை இது பாதிக்கும். நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். எங்களது உறுப்பினர்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கின்றனர்.

இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். மாநில வாட் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஜிஎஸ்டி குழு திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். தேச நலன் கருதி எடுக்கப்பட்ட எங்களது நியாயமான கோரிக்கையாகவே கருதுகிறோம்.

ஒழுக்கத்தை கொண்ட இந்த சேவை அதிகாரிகள் ஒத்துழையாமை இயக்கம் நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனால் இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வருவாய் சேவை ( சுங்கம் மற்றும் மத்திய கலால்), அகில இந்திய மத்திய கலால் ஆய்வாளர்கள் சங்கம் மற்றும் அகில இந்திய மத்திய கலால் மற்றுமு சேவை வரி அமைச்சக அதிகாரிகள் சங்கம் ஆகியவற்றின் நிர்வாகிகளுடன் மேற்கொண்ட ஆலோசனையில் அடிப்படையில் இந்த போராட்டம் நடக்கிறது. இதில் 70 ஆயிரம் பேர் உள்ளனர்.

வரும் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அறிமுகம் செய்வது என்ற முடிவு தற்போது ஏப்ரல் 1க்கு என முன்கூட்டியே மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.