டில்லி
இந்தியப் பத்திரிகையாளரும் என் டி டி வி நிகழ்வு நெறியாளருமான ரவீஷ்குமாருக்கு ஆசியாவின் உயரிய விருதான மகசேசே விருது அளிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவின் நோபல் பரிசு என கருதப்படும் விருது ரமோன் மகசேசே விருது ஆகும். இந்த 2019 க்கான இவ்விருது ஐந்து பேருக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஐவரில் ஒருவர் என் டி டி வியின் நிகழ்வு நெறியாளரான ரவீஷ்குமார் ஆவார். இந்த விருதைப் பெற்ற என் டி டி வி ரவீஷ்குமார் பிரைம் டைம் நிகழ்வை தொகுத்து வழங்குபவர் ஆவார்.
இவரைத் தவிர மியான்மரை சேர்ந்த கோ ஸ்வெ வின், தாய்லாந்தின் அங்கானா நீலபைஜித், பிலிப்பைன்ஸ் நாட்டின் புஜாண்டே கயன்யாப் மற்றும் தென் கொரியாவின் கிம் ஜாங் கி ஆகியோருக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ரமோன் மகசேசே விருதுக் குழு, “ரவீஷ்குமாரின் நேர்மையான துணிச்சலான, பாரபட்சமற்ற பத்திரிகையாளர் சேவைக்காக 2019 ஆம் ஆண்டுக்கான ரமோன் மேக்சேசே விருது வழங்கப்படுகிறது. குரலற்றவர்களுக்கு குரல் கொடுக்கும் அவருடைய உண்மை, உறுதி, சுதந்திரத் தன்மை, துணிச்சல், ஜனநாயகப் பொறுப்பு ஆகியவை பாராட்டத்தக்கது” என தெரிவித்துள்ளது.