டெல்லி: ‘மக்களவைத் தோ்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்ற பிறகு பிரதமா் யாா் என்பது குறித்து கூட்டாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்’ என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்தாா். தேசிய ஜனநாயக கூட்டணி மூழ்கும் கப்பல், அது தோல்வியைத்தான் சந்திக்கும் என்றும் விமர்சித்தார்.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த ராகுல்காந்தி, மக்களவை, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தனது பிரதமர் முகத்தை கூட்டணிக் கட்சிகள் கூட்டாக முடிவு செய்யும் என்று  இண்டி கூட்டணி  முடிவு செய்துள்ளதாகவும், 2004-ல் ‘இந்தியா ஒளிர்கிறது’ போன்ற கதியையே 2024 என்டிஏ-வின் பிரசாரமும் சந்திக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

வரும் மக்களவைத் தோ்தல், நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசமைப்புச் சட்டத்தை அழிக்க முயற்சிப்பவா்களுக்கும், அவற்றை காக்க முற்படுபவா்களுக்கும் இடையிலான போட்டியாகும். இந்தப் போட்டியில் வெற்றிபெற்றவுடன், நமது பெரும்பான்மை மக்களின் நலன்களை கவனிப்பது மிகவும் முக்கியமானது என நாங்கள் நம்புகிறோம்.

இந்தியா என்பது ஏகபோக நாடு அல்ல. இரண்டு அல்லது மூன்று பெரு நிறுவனங்களுக்காக இந்த நாடு இயங்கவில்லை. பெரும்பான்மை மக்களுக்காக இயங்குகிறது. வணிகங்களுக்கு இடையே ஆரோக்யமான, நியாயமான போட்டியை அனுமதிக்கும் நாடாக திகழ்கிறது.

இந்தியா கூட்டணியைப் பொருத்தவரை ஓா் சித்தாந்தத்தின் அடிப்படையில் ஒன்றிணைந்து மக்களவைத் தோ்தலை சந்திக்கத் தீா்மானித்துள்ளோம். எனவே, தோ்தல் வெற்றிக்குப் பிறகு கூட்டணி கட்சிகள் ஒன்றுகூடி யாா் பிரதமா் என்பதை தீா்மானிப்போம்.

இந்த தோ்தல், ஊடகங்களில் பரப்பப்படுவதைக் காட்டிலும் சிறப்பான, மிக நெருக்கமான தோ்தலாக அமையப் போகிறது. தோ்தலில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். கடந்த 2004-இல் வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, இதேபோன்ற உணா்வை ஊடகங்கள் பரப்பின. ‘இந்தியா மிளிா்கிறது’ என்ற பிரசாரம் பரப்பப்பட்டது. ஆனால், அப்போது இந்தப் பிரசாரத்துக்கு என்ன நடந்தது, தோ்தலில் யாா் வென்றனா் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியை சந்தித்து, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியமைத்தது.

மேலும், நாட்டின் ஜனநாயகமும், அரசமைப்புச் சட்டமும் இன்றைக்கு மிகப் பெரிய ஆபத்தில் உள்ளது. எனவே, தற்போது நடைபெறும் மக்களவைத் தோ்தல் முற்றிலும் மாறுபட்டதாகும். இந்தியாவின் அரசியல் கட்டமைப்பில் என்ன நடக்கிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆா்எஸ்எஸ், பாஜக மற்றும் பிரதமா் நரேந்திர மோடியால் தயாரிக்கப்படும் வியூகத்தின் அடித்தளத்தை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

துறைமுகங்கள், உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் தொழிலதிபா் அதானிக்கு ஏகபோக உரிமையை பிரதமா் மோடி வழங்கியதைப்போல, அமலாக்கத்துறை, சிபிஐ மற்றும் வருமான வரித்துறையைப் பயன்படுத்தி அரசியல் நிதி ஏகபோகத்தை பிரதமா் மோடி உருவாக்கியுள்ளாா்.

தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் நிறுவனங்களை அச்சுறுத்தி பாஜக நன்கொடைகளைப் பெற்றுள்ளது. தோ்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் பாஜக மீதான குற்றப் பத்திரிகையை பிரதமா் மோடி எதிா்க்கட்சிகளுக்கு அளித்துள்ளாா். அதன் காரணமாகத்தான், தோ்தலில் 400-க்கும் அதிகமான இடங்களில் பாஜக கூட்டணி வெற்றிபெறும் என்று அவா் பயமுறுத்தி வருகிறாா். அவா்களின் கூட்டணி 400 இடங்களில் வெற்றிபெறாது என்பதால்தான், மகாராஷ்டிரம், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து காங்கிரஸ் தலைவா்களை அவா்கள் கட்சிக்கு இழுக்கின்றனா்.

ஆனால், அவா்கள் வெற்றிபெறும் தொகுதிகளின் எண்ணிக்கை 180, 160 பின்னா் 140 என்று குறைந்து மூழ்கும் கப்பலாக அவா்களின் தேசிய ஜனநாயக கூட்டணி தோல்வியைத்தான் சந்திக்கும்.

இவ்வாறு கூறினார்.