ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குழு, தங்கள் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரை சந்திக்கும் அனுமதியைப் பெற்றுள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச நிர்வாகம் இவர்களுக்கான அனுமதியை வழங்கியுள்ளது. அப்துல்லாக்கள் இருவரும், ஆகஸ்ட் 5ம் தேதியிலிருந்து இன்னும் வீட்டுச் சிறையில்தான் வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாநாட்டுக் கட்சியின் ஜம்மு பிராந்திய தலைவர் தேவேந்தர் சிங் ரானா மற்றும் அக்கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், நாளை காலையில் ஜம்முவிலிருந்து விமானம் மூலமாக ஸ்ரீநகர் செல்கின்றனர் என்று தொடர்புடைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்துல்லாக்களை சந்திக்க வேண்டுமென கடந்த 2 நாட்களுக்கு முன்னர்தான் முடிவெடுக்கப்பட்டது. ஜம்மு பகுதியைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர்களின் மீதான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், அவர்கள் கூட்டிய அவசரக் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

தற்போது 81 வயதாகும் ஃபரூக் அப்துல்லா அவரின் ஸ்ரீநகர் இல்லத்திலும், அவருடைய மகன் ஒமர் அப்துல்லா மாநில விருந்தினர் இல்லத்திலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.