இஸ்லாமாபாத்
பனாமா பேப்பர் விவகாரத்தில் பிரதமர் பதவி இழந்த நவாஸ் ஷெரிஃப் 2006ல் உருவாக்கியதாக கூறப்படும் ஆவணங்கள் 2007ல் வெளியான எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு அவை போலி என நிரூபிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோதமாக சொத்து சேர்த்ததாக பாக் பிரதமர் நவாஸ் செரிஃப் பற்றி பனாமா பேப்பர்ஸ் தகவல் வெளியிட்டது. அதைத் தொடர்ந்து அவர் மேல் 13 வழக்குகள் பதியப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்று அவர் தனது மகள் மரியம் ஷெரிஃப் பேரில் பல சொத்துக்கள் லண்டனில் வாங்கிக் குவித்தது ஆகும். அதில் நவாஸ் ஷெரிஃப் சார்பில் ஒரு ஆவணம் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அந்த சொத்துக்கள் ஒரு டிரஸ்ட்டின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாக இருந்தது. 2006ல் அந்த சொத்துக்கள் வாங்கியதாக தெரிவித்த அந்த ஆவணம் கம்ப்யூட்டரால் காலிப்ரி (CALIBRI) எழுத்துருவில் தட்டச்சு செய்யப்பட்டிருந்தது.
காலிப்ரி எழுத்துரு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தால் 2007லிருந்து புழக்கத்துக்கு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி எழுத்துரு வருவதற்கு ஒரு வருடம் முன்பு அதை உபயோகித்திருக்க முடியாது என்பதைக் கொண்டு அந்த ஆவணங்கள் போலியாக உருவாக்கப்பட்டது உறுதியானது.
அதன் பின் நவாஸ் பதவி இழந்தது தெரிந்ததே. நவாஸ் இந்த குற்றங்கள் ஆதாரமற்றவை என்றும் தன்னை பழிவாங்கவே இந்த வழக்கு போடப்பட்டது என இன்றும் சொல்லி வருகிறார். ஆனால் இந்த எழுத்துரு பற்றிய கேள்விகளுக்கு அவரிடம் விடை இல்லை.
இந்த ஆவணங்களை நீதிமன்றத்துக்கு அளித்தவர் இஷாக் தார். இவர் நவாஸ் அமைச்சரவையின் நிதி அமைச்சர். முன்பு நவாஸ் ஷெரிஃப் இடம் அக்கவுண்டண்ட் ஆக பணி புரிந்தவர். போலி ஆவணங்கள் அளித்த குற்றத்தில் இவரும் தகுதிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தற்போது மெஜாரிட்டியாக உள்ள நவாஸ் ஷெரிஃபின் பி எம் எல் கட்சி விரைவில் பிரதமரை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.