மதுரை: திரும்பரங்குன்றம் மலை விவகாரத்தில், தேவையின்று ஆய்வு என்ற பெயரில் அங்கு சென்று பிரியாணி உணவு சாப்பிட்ட மநாதபுரம் எம்பி நவாஸ் கனி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவரது பதவியை பறிக்க வேண்டும் என குடியரசுத்தலைவர், பிரதமர், நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கு மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கடிதம் அனுப்பியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழ்நாட்டில் போதை கலாச்சாரம் தலைதூக்கி உள்ளதுடன், பல இடங்களில் சாதிய வன்முறைகளும், பாலியல் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. அதுபோல சிறுபான்மை மக்களின் அத்துமீறிய செயல்களும் விவாதப்பொருளாகி வருகின்றன.
இந்த நிலையில், சில இஸ்லாமிய அமைப்புகள், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றம் மலையை, சிங்கந்தர் மலை என கூறி பிரச்சினையை உருவாக்கினர். மேலும், ஆடு, கோழிகளை மலை மீது எடுத்துச்சென்று சமபந்தி விருந்து போடுவதாககூறி பரபரப்பை ஏற்படுத்தினர். இதை காவல்துறை முலையிலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். ஆனால், இதை எதிர்த்து இந்துமுன்னணியும் களமிறங்கிய நிலையில், காவல்துறையினர், ஆடு கோழிகளை எடுத்துவந்தவர்களை தடுத்துநிறுத்தி திருப்பி அனுப்பினர்.
இதைத்தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத்தலைவரும் ராமநாதபுரம் மக்களவை தொகுதி எம்பியுமான நவாஸ் கனி கடந்த 21ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள தர்காவிற்கு இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த சிலருடன் வருகை தந்தார். அப்போது அவருடன் வந்த இஸ்லாமியர்கள் சிலர் திருப்பரங்குன்றம் மலைக்கோயிலுக்கு செல்லும் வழியில் உள்ள மலைப்பாதையில் அமர்ந்து அசைவ உணவை உட்கொண்டனர். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்திலும் வெளியிட்டிருந்தார்.
இந்தப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கும் கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அறுபடை வீடுகளைக் கொண்ட முருகனின் முதல்வீடான திருப்பரங்குன்றம் மலையை அசுத்தப்படுத்திய நவாஸ்கனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நவாஸ் கனி எம்.பி.மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை கே.கே.நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் முத்துக்குமார் என்பவர் குடியரசுத்தலைவர், பிரதமர், உள்துறை அமைச்சர் நாடாளுமன்ற நிலைக்குழுவிற்கும் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், “ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார். நாடாளுமன்றத்தில் எம்.பி ஆக பதவி ஏற்கும் போது அவர் ஏற்ற பதவிப்பிரமாணத்தின் படி, மதவிரோதங்களை தூண்டும் வகை யிலும், மத வெறியுடனும் செயல்படமாட்டேன் அனைத்து மதங்களையும் மதித்து இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டினை நிலைநிறுத்துவேன் என எடுத்த உறுதிமொழியை முற்றிலும் மீறியுள்ளார்.
அவர் சார்ந்த மதத்திற்கு ஆதரவாகவும், இந்து மதத்திற்கு எதிராகவும், வெறுப்புணர்வுடன் செயல்பட்டு சர்ச்சைக்குரிய இடத்திற்கு தொகுதி விட்டு தொகுதி சென்று மதக்கலவரத்தை தூண்டி வருகிறார். தனது எம்பி பதவியை துஷ்பிரயோம் செய்து வரும் நவாஸ்கனி மீது உரிய நடவடிக்கை எடுத்து நாடாளுமன்றத்தில் அவர் பதவியினை பறிக்கும் வகையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவர வேண்டும்”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.