vaishnavi2
ரண்டாம் நாள் கொலு பற்றி இப்போது பார்ப்போமா?
அதற்கும் முன்பாக..
எதற்காக கொலு வைக்கிறோம்? அதன் தாத்பர்யம்தான் என்ன?
ஒரு நிமிடம் உங்கள் வீட்டு கொலுவை நினைத்துப் பாருங்கள், கொலு வைப்பதற்கு முன் என்னவெல்லாம் செய்வீர்கள்?
அதற்கு முன்பாக அந்தப் பகுதியையே சுத்தம் செய்வீர்கள்.
எனில் இது வீட்டை சுத்தம் செய்ய ஒரு அருமையான வாய்ப்பு
சில நாட்கள் முன்பாகவே வேட்டிகளைத்துவைத்துக் காயப்போட்டு சிரத்தையுடன் தயார் செய்வோம், வேட்டியா புடவையா அதற்கு பார்டர் இருக்கா இல்லையா என்பது பற்றிக் கவலை இல்லை. அதில் உள்ள சிரத்தைதான் சிறக்க வைப்பது.
அந்த நேரம் முழுவதும் நேரடியாகவும் மறைமுகமாகவும் கொலுவை நினைக்கவும் பேசவும் செய்கிறோம். அரு ஒரு வகை தெய்வ நினைப்பு. எனில் அதுவும் தியானமே.
அதெல்லாம் சரி.. அது ஏன் பொம்மைகளை வைக்கிறோம்?
மகிஷாசுரனின் வதத்துக்காக பிரம்மா, சிவன், விஷ்ணு முதலான அனைத்து தேவர்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்து பெரும் ஜோதியாகி அந்த ஒளிவடிவே தேவியாக உருமாறினாள் என்பது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கக்கூடும்.
அப்போது அம்பிகைக்கு கலை மகள் அலை மகள் மலைமகள் (அதாவது சரஸ்வதி லட்சுமி பார்வதி)  உட்பட எல்லா தெய்வங்களுமே தங்களது ஆயுதங்களைக் கொடுத்துவிட்டார்களாம். எனவே  தத்தம் சக்தியிழந்து விட்டார்கள். சுருங்கச் சொன்னால்  பொம்மைகளாக நின்றுவிட்டார்கள்.
அதாவது மகிஷாசுர மத்தினி ஒருத்தி மட்டுமே அந்த நாட்களில் தெய்வம். மற்ற அனைவருமே அப்போதைக்கு பொம்மைகள் என்பது ஐதீகம். அதனால் தான், பொம்மைகளாக நின்ற தெய்வங்களை கொலு வைத்துச் சிறப்பிக்கிறோம்.
எனினும் சக்தி வடிவானவளுக்கு பல்வேறு சக்திகள் ஒருங்கிணைந்துதான் அந்த ஆற்றல் வந்தது என்பதை உருவகப்படுத்துவதற்குத்தான் சரஸ்வதி லட்சுமி பார்வதியை மூன்று மூன்று நாட்கள் பூஜிக்கிறோம்.
ஆண் தெய்வங்களுக்கே பல வைபவங்கள் உள்ளன  சிறப்பாக நினைவுபடுத்திக் கொள்ளத்தான் இந்த வைபவம்.
பொம்மைகளை யார் மிக ரசிப்பார்கள்? நாம் குழந்தைகளாக மாறி ரசிப்போன் என்றாலும் உண்மையில் பொம்மைகள் என்றால் குதூகலப்படுவது குழந்தைகள்தானே?
ஆக நவராத்திரி பெண்குழந்தைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. இதில் இன்னொரு நன்மையும் உள்ளது. குழந்தைகள் என்றால் சும்மாவா? பொம்மைகளைப் பார்த்துக் கேள்விகள் கேட்பார்கள்.. என்ன கேட்பார்கள் நாம் என்ன சொல்வோம்.. அல்லது சொல்லவேண்டு என்பதை நாளைக்குப் பார்ப்போம்.
இன்றைய நாளின் முக்கியத்துவத்தை இப்போது கவனிப்போம்.
download
இன்றைக்கு ஆவாகனமாகப் போகிறவள் வைஷ்ணவி தேவி. சங்கும் சக்கரமும் கதையும் வில்லும் கையில் ஏந்தியிருப்பாள். கருட வாகனத்தில் வருவாள். ரத்தச் சிவப்பு நிறம் கொண்ட பட்டாடை அணிந்திருப்பாள். மதிய வேளையில் எலுமிச்சை சாதம் விரும்பிக் கேட்பாள் என்பதால் நைவேத்தியம் செய்ய நன்று.
நாம் அவளுக்குப் பூஜை செய்யும்போது  இளம் சிவப்பு நிற உடை (அதாவது ரோஸ்நிற உடை) தரித்துக் கொண்டு செய்ய வேண்டும்.
இன்று கோதுமை மாவில் கோலமிடுங்கள். கோலமே   தேவியின் நாமமாக இருக்கட்டும். இன்று கல்யாணி ராகத்தில் பாடுவதை இவள் விரும்பிக்கேட்டு வரம் அருள்வாள்.
இவள் திருமூர்த்தி சக்தியாக விளங்கி தனதான்யங்களை அள்ளித் தருபவள்.  வருபவர்களுக்கு கஸ்தூரி கோரோஜனை தரலாம், பாரிஜாதப் புஷ்பத்தை உதிரியாக அர்ச்சித்தால் அவள் அள்ளி வழங்கிவிடுவாள். சுக்குவெல்லம் போட்ட பானகமும் சுண்டலும் செய்தால் மிக நன்று
இவற்றில் எளிதில்  செய்ய முடிந்தவற்றையாவது செய்வோமே சிநேகிதிகளே? வாழ்த்துக்கள்.