புபனேஷ்வர்: சுதந்திர தினம் மற்றும் குடியரசு தின விழாக்களில் முதல்வர் மற்றும் மாநில அமைச்சர்களுக்கு அளிக்கப்படும் அணிவகுப்பு மரியாதை சடங்கை ரத்துசெய்துள்ளார் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்.

தன் காரிலிருந்து சிவப்பு ஹாரன் விளக்கை கழற்றிய முதல் முதலமைச்சர்களில் நவீன் பட்நாயக்கும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தற்போது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையானது விஐபி கலாச்சாரத்தின் மீது தொடுக்கப்பட்ட இரண்டாவது தாக்குதல்.

முதலமைச்சர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட அறிவிப்பில், “சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் உத்கல் திவாஸ் ஆகிய விழாக்களில் வழங்கப்படும் அணிவகுப்பு மரியாதையானது, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, பிரதமர், ஆளுநர், லோக்ஆயுக்தா, தலைமை நீதிபதிகள் மற்றும் உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆகியோருக்கானது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஒடிசா மாநில அரசாங்கம், சுதந்திர தின விழா நடைபெறும் இடம் மற்றும் இடவமைப்பை மாற்ற முடிவுசெய்தது. புதிய கண்காட்சி மைதானத்தில் 5,000 பேர் அமரவும், 10,000 பேர் நிற்கவும் முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.