குண்டுஸ் :
ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.
இதனையடுத்து ஆப்கன் படைகள் மற்றும் அமெரிக்க கூட்டுப்படைகளான நேட்டோ படைகள், தலிபான்கள் இருந்த பகுதியில் வான்வழி தாக்குதலில் ஈடுபட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக பொதுமக்கள் 30 பேர் உயிரிழந்தனர்.
இதனிடையே வான்வழி தாக்குதல் நடத்தியதை நேட்டோ ஒப்புக்கொண்டுள்ளது.
உடன் இருந்த படைகளை பாதுகாப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இது குறித்து விசாரணை நடத்தப்படும் எனவும் நேட்டோ தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் சடலங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் கவர்னர் அலுவலகம் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆப்கானிஸ்தானில், அரசாங்கத்துக்கு எதிராக செயல்பட்டு வரும், அல்கொய்தா, தலிபான்கள் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நேட்டோபடை உருவாக்கப்பட்டது.
நேட்டோ படையில் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, பிரான்ஸ், இத்தாலி உள்ளிட்ட 28 நாடுகளின் ராணுவ வீரர்கள் இடம்பெற்று உள்ளனர். இந்த படைகள் தலிபான்களை குறிவைத்து தாக்கி வருகிறது.