டெல்லி:
ஊழல், பண பிரச்னைக்கு எதிராக நாடு முழுவதும் ஜனவரி 6-ம் தேதி முதல் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம் நடத்த போவதாக காங்கிரஸ் அறிவித்து உள்ளது.
மத்திய அரசு கடந்த மாதம் 8-ம் தேதி 500, 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை மத்திய அரசு வெளியிட்டது. பழைய நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் டெபாசிட் செய்துவிட்டு புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்த மக்களுக்கு ரூபாய் நோட்டுகள் கிடைப்பதே பெரும் சிக்கலான நிலையாக இருந்தது. இதனால் உயிரிழப்பு சம்பவமும் நேரிட்டது.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடி குஜராத் முதல் அமைச்சராக இருந்த கால கட்டத்தில் ரூ. 65 கோடிக்கு மேல் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டினார். ஆதாரங்கள் என சில ஆவண போட்டோக்களையும் வெளியிட்டார். இந்த குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என ராகுல் காந்தி வற்புறுத்தி வருகிறார்.
இந்நிலையில் இந்த இரு விவகாரத்தையும் முன்வைத்து மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது. ஜனவரி 6-ம் தேதியில் இருந்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜிவாலா பேசுகையில், மோடியின் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டு, ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரங்களுக்கு எதிராக காங்கிரஸ் 3 கட்டமாக போராட்டம் நடத்தும். தேசிய அளவில் முதல்கட்ட போராட்டம் ஜனவரி 6-ம் தேதி தொடங்கும் என்றார்.