மத்திய பிரதேசத்தில் பசுவைக் கொன்றதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தில் பசுவை கொன்றவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

cows

மத்திய பிரதேசம் கந்த்வா மாவட்டத்தில் உள்ள மோகாட் என்ற பகுதியில் கடந்த வாரம் பசுக்கள் கொல்லப்பட்டதாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அப்பகுதியில் சிலர் பசுவை படுகொலை செய்துள்ளதை உறுதி செய்தனர்.

அதன்பிறகு பசு படுகொலை தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கர்கலி கிராமத்தை சேர்ந்த ராஜூ, ஷக்கீல் மற்றும் அசார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அந்த மூவரையும் கைது செய்து, பசுவதை தடுப்பு சட்டத்தின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் அந்த மூவர் மீதும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கீழ் கைது செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளனர். மூவரையும் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியரிடம் எஸ்பி கேட்டுக் கொண்டதன் பேரில் அவர்கள் மீது இந்த சட்டம் தற்போது பாய்ந்துள்ளது.

2016ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி செய்தபோது பசுவை கொலை செய்வோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது. ஆனால், தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று இருக்கக்கூடிய சூழலில் பசுவை படுகொலை செய்ததாக மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது அரசியல் சூழலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.