ஹரியானா மாநிலம் ரேவாரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் தேசிய கொடி வலுக்கட்டாயமாக விற்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த பகுதியில் உள்ள கடைகளில் ரேஷன் பொருள் வாங்க செல்லும் மக்களிடம் ரூ. 20 கொடுத்து தேசிய கொடி வாங்கினால் தான் பொருள் வழங்கப்படும் என்று அங்குள்ள கடை ஊழியர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

அன்றாடம் ஒருவேலை கஞ்சிக்கு கூட வழியில்லாமல் ரேஷனில் கிடைக்கும் பொருட்களை கொண்டு தங்கள் குழந்தைகளின் பட்டினியை போக்கிவரும் தினக்கூலிகள் பலரும் இந்த அடாவடிதனத்தை எதிர்த்து குரல் கொடுத்து வருகின்றனர்.

அஸாதி கா அம்ருத் மஹோத்சவ் என்ற பெயரில் ஒரு சிலர் அமிர்தத்தை பருக பாமர மக்களின் துன்பத்தை மேலும் கடைந்தெடுப்பதாக அவர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து அந்த பகுதி உணவுப் பொருள் வழங்கல் துறை அதிகாரி கூறுகையில், ரேவாரி பகுதிக்கு உட்பட்ட 230க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் தேசிய கொடி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இதனை வாங்க யாரையும் கட்டாயப்படுத்தவில்லை என்றும் தாமாக முன்வந்து வாங்குபவர்களுக்கு மட்டுமே தேசிய கொடி வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், இந்த கொடிக்காக வசூலிக்கப்படும் 20 ரூபாய் செஞ்சிலுவை சங்கத்துக்கு நன்கொடையாக வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

‘ஹர் கர் திரங்கா’ பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மாவட்டங்களைச் சேர்ந்த அனைத்து துறை அதிகாரிகளையும் ஹரியானா அரசு வலியுறுத்தியுள்ளது.