சென்னை: தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்த உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு வழக்கு ஒத்திவைத்தது. நாடு முழுவதும் தேசிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதற்கு தமிழகம் உள்பட சில மாநிலங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. தமிழக அரசு தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக மாநில கொள்கையை உருவாக்க குழுவை அமைத்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்த உத்தரவிடக்கோரி , கடலூரைச் சேர்ந்த ஆலமரம் என்ற தொண்டு நிறுவனத்தின் செயலாளர் அர்ஜுனன் இளையராஜா என்பவர் உயர் நீதிமன்றத்தில் bபாதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். அவரது மனுவில், நாட்டில் ஒரே சீரான கல்வி முறையை கொண்டு வரும் வகையிலும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குக்காக மத்திய அரசு அறிவித்த தேசிய கல்விக் கொள்கை 2020 உருவாக்கப்பட்டு உள்ளது. இதற்காக பல தரப்பட்ட நிபுணர்களிடம் கருத்துக்கள் கேட்டு, பல்வேறு குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழகஅரசு தேசிய கல்விக் கொள்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், , தாய்மொழி கல்வியை வலியுறுத்தும் தேசிய கல்விக் கொள்கையை இந்தி மற்றும் சம்ஸ்கிருத மொழி திணிப்பு என்ற காரணம் காட்டி, அரசியலுக்காக எதிர்த்து வருகிறது. இது நியாயமற்றது. தேசிய கல்விக்கொள்கையில், எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை. தாய்மொழியுடன் சேர்த்து கூடுதல் மொழிகளை கற்றுக் கொள்ளும் வகையில் மும்மொழிக் கொள்கையையே வலியுறுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், அந்நிய மொழியான ஆங்கிலத்தை அனுமதிக்கும்போது நாட்டின் அலுவல் மொழியான இந்தியை எதிர்ப்பது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், கல்வித்தரத்தை மேம்படுத்தும் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழக அரசு செயல்படுவது மாநிலத்தை கல்வியில் பின்தங்கச் செய்துவிடும் என்பதால் தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020ஐ அமல்படுத்த உத்தரவிட வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழகஅரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், தமிழகத்தில் மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்காக, டெல்லி உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்று கடைசி வாய்ப்பாக பதில் மனு தாக்கல் செய்ய நான்கு வாரங்கள் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.
இதற்கிடையில், இந்த வழக்கில் தங்களையும் இரு தரப்பாக இணைக்க கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசனும் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இதையடுத்து இந்த வழக்கில் மத்திய உயர்கல்வித்துறை சார்பு செயலாளர் சார்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த பதில் மனுவில் கூறியிருப்பதாவது,
`கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 2.5 லட்சம் கிராம பஞ்சாயத்துகள், 6,600 வட்டாரங்கள், 6,000 ஊரக உள்ளாட்சி அமைப்புகள், 676 மாவட்டங்கள், 36 மாநிலங்களுடனும், பல்கலைக்கழக மானிய குழு, அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய இடைநிலை கல்வி வாரியம், கல்வி நிறுவனங்கள், அரசு துறைகளுடனும் கலந்தாலோசித்து தேசிய கல்விக் கொள்கை வகுக்கப்பட்ட்டுள்ளது.
இந்த ஆலோசனைகளை ஆராய அமைக்கப்பட்ட மத்திய அமைச்சரவை செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்ரமணியம் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு, 2016ம் ஆண்டு இறுதியில் அறிக்கை தாக்கல் செய்தது. அதனடிப்படையில் 2017ம் ஆண்டு பிரபல விஞ்ஞானி கே.கஸ்தூரி ரங்கன் தலைமையில் வரைவு தேசிய கல்வி கொள்கை குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு, 2019 ல் வரைவு கொள்கையை மத்திய அரசிடம் சமர்பித்து, அது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யபட்டு கல்வி தொடர்புடையவர்களின் கருத்துகளையும், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கருத்துகளையும் பெற்ற பிறகே, 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி தேசிய கல்வி கொள்கை அறிவிக்கப்பட்டது.
தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது குறித்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், அவற்றின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் உள்ளிட்டோரிடம் 2020 செப்டம்பர் முதல் 2022 ஜனவரி வரை பல்வேறு கடிதப் போக்குவரத்து, பயிற்சி வகுப்புகள், கருத்தரங்கங்கள், மாநாடுகள் ஆகியவற்றை நடத்தி உள்ளது. பயிற்சியோடு நிறுத்திவிடாமல் தேசிய கல்வி கொள்கையை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளால் எவ்வாறு அமல்படுத்தப்பட்டு, வெற்றி காணப்பட்டுள்ளது என்பது தொடர்பாக மத்திய அரசுக்கு தெரிவிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.