சசிகலாவின் கணவரும், புதியபார்வை இதழின் ஆசிரியருமான ம.நடராஜன் இன்று மரணமடைந்தார்.
74 வயது என்றாலும் கடந்த ஒருசில வருடங்கள் முன்பு வரை ஆரோக்கியமாகவே வலம் வந்தார். இடையில் அவருக்கு சிறுநீரக மற்றும் கல்லீரல் பிரச்சினை ஏற்பட்டது.
மிகச் செல்வாக்கு மிக்க நபர். நடராஜனை நலம் விசாரித்துத் திரும்பி கவிஞர் வைரமுத்து சொன்னது போல, “மிக உயரிய சிகிச்சை” அளிக்கப்பட்டது.
ஆனாலும் கடந்த சில நாட்களாகவே, அவர் ஆபத்தான கட்டத்தில் இருப்பதாகத்தான் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துவந்தது.
நடராஜன் மரணமடைந்திருக்கும் வேளையில் கடந்த (2017ம்) அக்டோபர் 4ம் தேதி அவருக்கு நடந்த உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நினைவுக்கு வருகிறது.
அன்று அவருக்கு கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் கார்த்திகேயன் என்ற மூளைச்சாவடைந்த இளைஞரிடமிருந்து எடுத்து பொறுத்தப்பட்டன.
இந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்ற விதம் குறித்து அப்போது பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
இப்போது இன்னொரு கேள்வி எழுந்துள்ளது. உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு முழுதாக ஆறு மாதங்களுக்குள் நடராஜன் மரணமடைந்திருக்கிறார்.
உடல் உறுப்பு தானம் என்பது மோசடியே என்று தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அக்கு ஹீலர் மோகன்ராஜிடம் பேசினோம்.
அவர், “பொதுவாகவே உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் செய்துகொண்டவர்கள் ஆயுட்காலம் மிகக் குறைவே. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட எவரும் அதன் பிறகு ஆரோக்கியமாகவோ, நீண்டகாலமோ வாழ்ந்ததில்லை என்பது கண்கூடு.
இதுவரை உடல் உறுப்புதானம் பெற்றவர்கள் குறித்த விபரத்தைக் கேட்டு தகவல் அறியும் உரிமை சட்டப்படி மனு செய்தபோது, அந்தத் தகவல்களைத் தர மறுப்பு தெரிவிக்கப்பட்டது. அதாவது ஆர்.டி.ஐ.யில் இதற்கு விதிவிலக்காம்.
கடந்த வருடங்களில் எத்தனை பேர் உறுப்புதானம் பெற்றார்கள்.. அதன் பிறகு அவர்கள் எத்தனை காலம் வாழ்ந்தார்கள் எந்த தகவலை வெளிப்படையாக அறிவித்தாலே, உறுப்புதானத்தால் எந்தவித பயனும் இல்லை என்பது விளங்கும்” என்கிறார் அக்கு ஹீலர் மோகன்ராஜ்.
அக்குஹீலர் உமர் ஃபாருக்கும் இதே கருத்தைச் சொல்கிறார். மேலும், “நம் உடலுக்கு தேவையான சக்தியை உடலே உற்பத்தி செய்துகொள்ளும். உணவு, நீர், காற்றில் இருந்து இதை உடலானது உற்பத்தி செய்துகொள்ளும்.
உடல் செய்யும் முதன்மையான வேலை உருவாக்குதல். (கிரியேசன்) மரபு வழி அறிவியலில் சொல்வோம்.
நாம் எல்லோருமே.. எல்லா உயிரிகளுமே, இந்த கிரியேசனை கடந்துதான் வந்திருக்கிறோம். தாயின் கருவறையில் நாம் உருவாகும்போது, நமது உறுப்புகள் அப்படித்தான் இயல்பாக தானாகவே உருவானது. நாம் உருவாக்கவில்லை.
பிறந்தபிறகும், உறுப்புகள் வளர்ச்சியும், அதில் பிரச்சினை ஏற்பட்டால் சரி செய்துகொள்வதும் உடலின் இயல்பு. அதைச் செய்வதற்குத்தான் உடலில் எதிர்ப்பு சக்தி என்பது இருக்கிறது.
இப்படி இயற்கையாக உடல் கொடுக்கும் உறுப்புகளுக்கு இணையாக வெளியில் இருந்து பொறுத்தப்படும் எதுவும் ஈடாகாது.
உடல் உறுப்புகள் ஒருபக்கம் இருக்கட்டும்..
சாதாரணமான கால்சியம், மினரல், விட்டமின்களை உடலே உற்பத்தி செய்துகொள்கிறது. அது குறையும்போது வெளியில் இருந்து – செயற்கையாக உருவாக்கப்பட்ட – விசயங்களை கொடுக்க முயற்சிக்கிறோம்.
அதே நேரத்தில் இன்னொரு விசயத்தை நாம் கவனிக்க வேண்டும்.
நமது இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் ஆசிட் இருக்கிறது. இதில் ஒரு மில்லியை மட்டும் எடுத்துவிட்டு மருந்துக்கடைகளிலும் ஆய்வுக்கூடங்களிலும் இருக்கும் ஹைட்ரோ குளோரிக் ஆசிட்டை ஏற்றினால் என்ன ஆகும்.
அதாவது இயற்கையாக மனித உடலில் உருவாகும் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டுக்கும் செயற்கையாக உருவாக்கப்படும் ஹைட்ரோகுளோரிக் ஆசிட்டுக்கும் தன்மை வேறு வேறு.
உடல் உற்பத்தி செய்யும் ஆசிட்டுக்கு மாற்றாக வெளியில் உற்பத்தி செய்யப்படும் ஆசிட்டை பயன்படுத்த முடியாது.
சாதாரணமான ஒரு விசயத்துக்கே இப்படி என்ரால். வெளியில் இருந்து உடல் உறுப்புகளை எப்படி ஒரு உடல் ஏற்கும்.
வெளியில் இருந்து நமது உடல் ஏற்பது உணவு மட்டுமே.
பல விட்டமின் மாத்திரைகளை பல வருடங்களா சாப்பிட்டாலும் பயனில்லை என்பதை அனுபவபூர்வமாக உணரலாம்.
ரத்த தானம் குறித்து பார்ப்போம். ரத்தம் ஏற்றப்பட்டவருக்கு, இரண்டு மூன்று நாட்கள் வியர்வை யூரின், மலத்தில் ரத்த செல்கள் போகும்… அதாவது ஒரே வகையைச் சேர்ந்த ரத்தமாக இருந்தாலும் இன்னொருவர் உடலில் இருந்து ரத்தம் ஏற்றப்படுவதை உடல் ஏற்பதில்லை. நான் ரத்தவியல் துறையில் படித்தவன்.. முன்னாள் விரிவுரையாளர் என்பதையும் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
இந்த ரத்த தானத்தின் தொடர்ச்சியாகத்தான் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை பார்க்க வேண்டும்.
கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகளை மாற்றி, அதன் பிறகு நீண்ட நாட்கள் வாழ்பவர்கள் மிகக் குறைவே. ஒரு சிலர்தான், தங்களது உடலில் உள்ள அபரிமிதமான எதிர்ப்பு சக்தி காரணமாக குறிப்பிட்ட காலம் வாழ்வார்கள். ஆகவே உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது தேவையற்றது.
நடராஜன் முதிர்ந்த வயதுள்ளவர் என்பதால் மரணம் நேர்ந்தது என்று கூறலாம். அது சரியாகவும் இருக்கலாம். அப்படிப்பட்டவருக்கு உடல் மாற்று அறுவை சிகிச்சை ஏன் என்ற கேள்வியும் எழுகிறது அல்லவா ” என்கிறார் ஹீலர் உமர் பாரூக்.
ஆங்கில முறை மருத்துவர் (எம்.பி.பி.எஸ்.) சரவணனிடம் பேசினோம்.
“உடல் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது இப்போதுதான் வளரந்துவரும் துறை. ஆகவே இதில் சில குறைகள் நிவர்த்திக்கப்படாமல் இருக்கலாம். ஆனால் முழுமையாக இதை தேவையற்றது என சொல்ல முடியாது.
மேலும், மிக மோசமான உடல் பாதிப்பு ஏற்பட்ட நிலையில்தான் வேறு வழியே இல்லாமல் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆகவே இந்த அறுவை சிகிச்சைக்குப்பிறகு குறுகிய காலத்தில் இறப்பவர் விகிதம் அதிகமாக இருக்கலாம்” என்றார்.
உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையால் பயன் உண்டா இல்லையா என்கிற சர்ச்சை ஒருபுறம் இருக்க..
உறுப்பு தானம் செய்பவர்கள் ஏழைகளாகவும், பெறுபவர்கல் வசதி மிக்கவர்களாகவும் இருப்பது இன்னொரு சர்ச்சையான கேள்வியை எழுப்புகிறது.
– டி.வி.எஸ். சோமு