நாசிக்

ந்தியாவில் ஒயின் தயாரிப்பில் புகழ் பெற்ற நாசிக் நகரில் தயாராகும் ஒயின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது.

நாசிக் நகரம் சர்வதேச அளவில் ஒயின் தயாரிப்புக்கு மிகவும் புகழ் பெற்றதாகும்.  இந்நகரம் ஒயின்களின் தலைநகரம் எனப் புகழ் பெற்றதாகும்.  உலக அளவில் இந்த ஒயினுக்கு நல்ல கிராக்கி இருந்த போதிலும் பிரிட்டன், அமெரிக்கா, மற்றும் கனடா ஆகிய நாடுகளில் மிக அதிக அளவில் விற்பனை ஆகிறது.   தற்போது மத்திய அரசு இந்த நாசிக் ஒயினுக்கு மேலும் ஒரு சிறப்பை அளித்துள்ளது.

நாசிக் நகரத்தில் தயாரிக்கப்படும் ஒயினுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  ஏற்கனவே காஞ்சிபுரம் பட்டு போன்ற பல பொருட்களுக்கு இவ்வாறு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டுள்ளது.  இவ்வாறு புவிசார் குறியீடு அளிப்பதன் மூலம் இந்த  பொருட்களுக்கான சர்வதேச சந்தை மேலும் விரிவடையும் என நம்பப்படுகிறது.  இந்த ஒயினுக்கு இனி நாசிக் சமவெளி ஒயின் எனப் பெயரிடப்பட்டு பிரதமரின் சுயச் சார்பு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பாட்டுய்ள்ளது.

இது குறித்து அகில இந்திய ஒயின் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ஜகதீஷ் ஹோல்கர் இவ்வாறு நாசிக் சமவெளி ஒயின் எனப் பெயரிடப்பட்டுள்ளதால் அமெரிக்காவில் உள்ள நேபா சமவெளி ஒயினைப்  போல் இதுவும் மேலும் புகழடையும் என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  பிரதமரின் சுயச்சார்பு திட்டத்தின் கீழ் இந்த மாவட்டத்தில் உற்பத்தியாகும் அனைத்து ஒயின்களும் நாசிக் சமவெளி ஒயின் என்னும் அடிப்படையில் உலக அளவில் நல்ல விற்பனையைச் சந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒயினின் சுவைக்கு முக்கிய காரணம் இந்த மாவட்டத்தின் மண் வளம் மற்றும் இங்குள்ள புவியியல் நிலை ஆகியவை ஆகும் என ஒயின் ரசிகர்கள் கூறுகின்றனர்.   இந்த மண்ணில் விளையும் திராட்சையின் அபார சுவையினால் நாசிக் ஒயின் மிகவும் சுவையுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.   மேலும் இந்த நாசிக் சமவெளி ஒயினுக்கு வரிகள் ரத்து செய்யப்பட்டால் அகில இந்திய அளவில் விற்பனை நடக்கும் என வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.