குங்குமப்பூ மலரும் மாநிலத்தில், தாமரை மலராமல் போனது ஏன் ?

Must read

 

ஜம்மு :

ம்மு காஷ்மீர் மாநிலத்தில் பா.ஜ.க. அமோக வளர்ச்சி பெற்றுள்ளதாக கூறிவந்த நிலையில், அங்கு நடந்த மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் தேர்தலில் குறைந்த எண்ணிக்கையிலேயே தாமரை மலர்ந்திருப்பது, பா.ஜ.க.வின் கூற்றை பொய்யாக்கி உள்ளது.

2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்த பின், அக்டோபர் 2020-ல் அம்மாநில பஞ்சாயத் ராஜ் சட்டத்தில் புதிதாக திருத்தங்கள் செய்து மாவட்ட அபிவிருத்தி கவுன்சில் எனும் உள்ளாட்சி தேர்தலை முதல் முறையாக நவம்பர் 28 ல் தொடங்கி டிசம்பர் 19 வரை பல கட்டங்களாக நடத்தியது தேர்தல் ஆணையம், இதன் வாக்கு எண்ணிக்கை இந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.

மொத்தமுள்ள 20 மாவட்டங்களில், மாவட்டத்திற்கு 14 பிரதிநிதிகள் வீதம் மொத்தம் 280 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள் பாகிஸ்தான் ஆதரவு காஷ்மீரில் பிறந்தவர்கள் என்ற சர்ச்சையை தொடர்ந்து அவ்விரு தொகுதிகளுக்கான தேர்தல் நிறுத்திவைக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து செய்ததன் மூலம், இங்கு மட்டுமல்ல உலகளவில் பா.ஜ.க.வின் புகழ் வளர்ச்சி அடைந்திருப்பதாக கூறிவந்த நிலையில், 278 தொகுதிகளில் 75 தொகுதிகளில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற்றது.

பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி ஆகியோரது தலைமையில் மக்கள் கூட்டணி என்ற பெயரில் இணைந்து போட்டியிட்ட கட்சிகள் 110 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஜம்மு பிராந்தியம் எங்களது கோட்டை அங்கு எங்களை ஒன்றும் செய்யமுடியாது என்று மக்கள் கூட்டணிக்கு சவால் விட்ட பா.ஜ.க. இந்த பிராந்தியத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 5 மாவட்டங்களில் மட்டுமே மாவட்ட தலைவர் பதவியை பிடிக்க முடிந்தது, அதோடு, இந்த பிராந்தியத்தில் மட்டும் தான் 72 தொகுதியை வெல்ல முடிந்தது.

காஷ்மீர் பிராந்தியத்தில், பந்திபுரா, ஸ்ரீநகர், புல்வாமா ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஒரு இடத்தை பிடித்துள்ளது. புல்வாமா மாவட்டத்தின் காகபுரா-2 தொகுதியில் வெற்றி பெற்ற பா.ஜ.க.வை சேர்ந்த மின்னாஹ் லதீப், காஷ்மீர் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று வருகிறார், அவருக்கு வயது 21 என்பது குறிப்பிடத்தக்கது.

மின்னாஹ் லதீப்

பா.ஜ.க. வை சேர்ந்த பல்வேறு முக்கிய தலைவர்கள் குறிப்பாக காஷ்மீர் பிராந்தியத்தில் படுதோல்வி அடைந்திருக்கும் நிலையில் இளம் மாணவி மின்னாஹ் லதீபின் வெற்றி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

உதம்பூர்-கத்துவா எம்.பி.யும் பிரதமர் அலுவலக விவகார துறை இணை அமைச்சராக உள்ள ஜதிந்தர் சிங் நாடாளுமன்ற தொகுதி அமைந்துள்ள தோடா, ராம்பன், கிஸ்த்வார் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 42 இடங்களில் 14 இடங்களை மட்டுமே பா.ஜ.க. கைப்பற்றியுள்ளது.

தோடா மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 இடங்களில் 8 இடங்களை கைப்பற்றி முன்னணியை பெற்றது, மற்ற இரு மாவட்டங்களில் தலா 3 இடங்கள் மட்டுமே வென்றுள்ளது.

மெஹபூபா முப்தி தலைமையிலான பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் தோடா மற்றும் கிஸ்த்வார் ஆகிய இரு மாவட்டங்களை சேர்ந்த நான்கு பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களில் சக்தி ராஜ் பரிஹார் மற்றும் சுனில் சர்மா ஆகிய இரண்டு பேர் அமைச்சர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில், இம்முறை இரண்டு தொகுதிகளில் போட்டியிட்ட சக்தி ராஜ் பரிஹார் இரண்டிலும் தோல்வியடைந்தார்.

மாவட்டம்  பா.ஜ.க. வென்ற தொகுதிகளின் எண்ணிக்கை
ஜம்மு பிராந்தியம்
கத்துவா 13
சம்பா 13
உதாம்பூர் 11
ஜம்மு 11
தோடா 8
ரியாசி 7
கிஸ்த்வார் 3
ராம்பன் 3
ரஜௌரி 3
பூன்ச் 0
காஷ்மீர் பிராந்தியம்
புல்வாமா 1
பந்திபுரா 1
ஸ்ரீநகர் 1
குப்வாரா 0
பாரமுல்லா 0
கந்தேர்பால் 0
புத்காம் 0
ஷோபியான் 0
குல்காம் 0
அனந்த்நாக் 0

பா.ஜ.க. மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா-வின் சொந்த மாவட்டமான ரஜௌரி-யில் மூன்று இடங்களை மட்டுமே கைப்பற்ற முடிந்த நிலையில் பூன்ச் மாவட்டத்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அவரது வாரிசுகள் என்று பல இடங்களில் போட்டியிட்ட பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் தோல்வியை தழுவினர்.

சிறப்பு அந்தஸ்த்தை ரத்து செய்தபின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்திருக்கும் இந்த தேர்தலில் நினைத்த அளவுக்கு தாமரை மலராமல் போனதற்கு என்ன காரணம் என்று மாநில பா.ஜ.க.வினருடன் ஆலோசனையில் இறங்கியுள்ளது பா.ஜ.க.வின் மத்திய குழு.

More articles

Latest article