சிலியில் உள்ள எல் சாஸ் ஆய்வகத்தால் டிசம்பர் 27, 2024 அன்று புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சிறுகோள், 2032 ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் வாய்ப்பு இருமடங்காக அதிகரித்துள்ளதை அடுத்து, இந்த சிறுகோள் நாசாவின் தாக்க அபாயப் பட்டியலில் முதலிடத்திற்கு உயர்ந்துள்ளது.

சிலியில் உள்ள ஜெமினி தெற்கு தொலைநோக்கி மூலம் கைப்பற்றப்பட்ட படங்கள் 131 முதல் 295 அடி அகலம் கொண்ட சிறுகோள் பற்றிய விரிவான தோற்றத்தை வழங்கி இருக்கின்றன.

2024 YR4 என்ற இந்த சிறுகோளுக்கு ‘சிட்டி கில்லர்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

உலகளாவிய கிரக பாதுகாப்பு ஒத்துழைப்பான சர்வதேச சிறுகோள் எச்சரிக்கை வலையமைப்பு (IAWN), ஜனவரி 29 அன்று வெளியிட்ட ஒரு எச்சரிக்கை குறிப்பில் இந்த சிறுகோள் பூமியைத் தாக்க 1 சதவீதம் மட்டுமே வாய்ப்பு உள்ளதாகத் தெரிவித்திருந்தது.

நாசாவின் சமீபத்திய கணக்கீடுகள் தாக்க நிகழ்தகவை 3.1 சதவீதமாக மதிப்பிடுகின்றன, பூமியின் தாக்கம் ஏற்படுவதற்கான வாய்ப்பு டிசம்பர் 22, 2032 என்றும் கூறியுள்ளது.

‘சிட்டி கில்லர்’ என்ற இந்த சிறுகோள் பூமியை தாக்கும் பட்சத்தில் ஹிரோஷிமாவை விட 500 மடங்கு அதிகமான பாதிப்பு ஏற்படும் என்றும் ஒரு நகரமே அழிந்துவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

2004ம் ஆண்டு கண்டறியப்பட்ட அப்போபிஸ் என்ற 30 மீட்டருக்கும் அதிகமான அளவிலான ஒரு சிறுகோள் 2029ம் ஆண்டு பூமியைத் தாக்க 2.7 சதவீதம் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டது.

பின்னர், கூடுதல் அவதானிப்புகளால் இந்த வாய்ப்பு நிராகரிக்கப்பட்டது.

ஆனால், சிட்டி கில்லரை பொறுத்தவரை அது பூமியைத் தாக்கும் நிகழ்தகவு 3.1 சதவீதமாக அதிகரித்திருப்பது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.