அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் பொறுப்பேற்று ஒரு மாதம் ஆகும் நிலையில் உள்ளூர் நிர்வாகம் முதல் உலகின் அனைத்து மூலைமுடுக்குகளையும் தனது கைக்குள் கொண்டு வர தேவையான அனைத்து முயற்சிகளையும் டிரம்ப் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார்.
இதன் ஒரு கட்டமாக பைடன் ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட அரசுப் பணியாளர்களில் ப்ரொபெஷன் அதிகாரிகள் 10000 பேரை பணி நீக்கம் செய்ய கடந்த வாரம் உத்தரவிட்டார்.
அரசின் செலவினங்களை மிச்சப்படுத்தவும் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்று வலியுறுத்தப்படுகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின் போதே இதுகுறித்து பேசிய உலகின் முன்னணி கோடீஸ்வரரான எலன் மஸ்க், பல்லாயிரம் கோடிகளை டிரம்புக்கு ஆதரவாக தேர்தலின் போது செலவழித்தார்.
இதனைத் தொடர்ந்து தேர்தலில் வெற்றிபெற்று அதிபர் பொறுப்பேற்றுள்ள டிரம்ப் அரசாங்க செயல்திறன் துறை அல்லது டோஜ் (DoGE)ன் தலைமைப் பொறுப்பை தனது தீவிர ஆதரவாளரான மஸ்கிடம் ஒப்படைத்துள்ளார்.
அரசுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் இதுவரை 55 பில்லியன் அமெரிக்க டாலர்களை (4.77 லட்சம் கோடி ரூபாய்) மிச்சப்படுத்தியுள்ளதை அடுத்து மஸ்க்-கின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் டிரம்ப் பச்சைக்கொடி காட்டி உள்ளார்.
இந்த நிலையில், அடுத்தகட்டமாக வரி அமலாக்கத்துறை, வங்கி ஒழுங்குமுறை அதிகாரிகள் மற்றும் ராக்கெட் விஞ்ஞானிகளை பணி நீக்கம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
ஏற்கனவே, அரசுப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததன் மூலம் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை மற்றும் வங்கி ஊழியர்கள் மீதான இந்த நடவடிக்கை என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது விவாதத்திற்குள்ளாகி உள்ளது.