பெங்களூரு:

பிரதமர் நரேந்திர மோடியின், பண மதிப்பிழப்பு குறித்து தயாரிக்கப்பட்டுள்ள  கன்னட மொழி திரைப்படம், அடுத்த மாதம் வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு நவம்பர் 8ந்தேதி இரவு, இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சம்பவம் நடைபெற்றது. உயர் மதிப்புடையே ரூ.500, 1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.  கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை என்றார். ஆனால் கருப்புப் பணம் ஒழியாமல், பொதுமக்களே கடுமையான பாதிப்புகளை எதிர் கொண்டனர்.

இந்த நடவடிக்கையை மையமாக கொண்டு, கே.எச்.வேணு என்பவர், பிரதமர் மோடி குறித்து, 8/11 என்ற பெயரில், கன்னடத்தில் திரைப்படம் தயாரித்து உள்ளார்.

இந்த படத்தை அப்பி பிரசாத்  இயக்கியுள்ளார். கேரளாவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர், பிரதமர் மோடி வேடத்தில் நடித்து உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, கர்நாடகா மாநிலம் கூர்க் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் நடைபெற்று வந்தது. அதன் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில்,அடுத்த மாதம், நாடு முழுவதும் வெளியிட திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதில் மோடி வேடத்தில் நடித்துள்ள ராமச்சந்திரன்,  கடந்த ஆண்டு, கேரளாவின் பையனுார் ரயில் நிலையத்தில், தோளில் பையுடன், ரயிலுக்காக  காத்திருந்தபோது, யாரோ ஒருவர் எடுத்த படம், சமூக வலைதளங்களில் வைரலானது.  அதைத்தொடர்ந்து அவர் மோடி வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.