புதுடெல்லி: நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பிரதமர் நரேந்திர மோடி, வியாழக்கிழமை அளித்த விருந்தைப் புறக்கணித்தனர் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா, ராகுல் மற்றும் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்ந்த 750க்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு, அதிகாரப்பூர்வமற்ற முறையில் விருந்தளித்தார் பிரதமர் மோடி. ஆனால், இந்த விருந்தில் திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் ஆகிய கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை.

மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத், திமுக உறுப்பினர் கனிமொழி, ஆம் ஆத்மியின் உறுப்பினர் சஞ்சய் சிங் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் இதர மூத்த தலைவர்கள் இந்த விருந்தில் கலந்துகொண்டனர். டெல்லி அசோகா ஹோட்டலில் இந்த விருந்து அளிக்கப்பட்டது.

இந்த விருந்தில் கலந்துகொண்டவர்கள் பிரதமர் மோடியுடன் மிகவும் சகஜமாகப் பேசினர். சிலர் பிரதமருடன் செல்ஃபியும் எடுத்துக்கொண்டனர். மொத்தத்தில் அந்தச் சூழல் இனிமையாக இருந்ததென்று தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன.