ஆக்ரா: உத்திரப்பிரதேச மாநில ஆக்ரா மண்டலத்தின் சா போகார் கிராமத்தில் வசிக்கும் ஏழை முஸ்லீம்கள், தங்களின் வசிப்பிடத்தையே மயானமாக்கிக் கொண்டு, பரிதாபமான முறையில் வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களின் புழக்கடைகள், வீட்டு வாசல்கள் மற்றும் மதில் சுவரின் உட்புறப் பகுதிகள் போன்ற அனைத்திலும் கல்லறைகள் நிறைந்துள்ளன. தங்களின் பிள்ளைகள், பெற்றோர்கள் மற்றும் இதர உறவினர்களின் கல்லறைகளை நாள்தோறும் பார்த்துக்கொண்டே அவர்கள் தமது வாழ்வை நகர்த்துகின்றனர். கல்லறைகளுக்கு மத்தியில்தான் அவர்களின் அன்றாட வாழ்வு நகர்கிறது.

அரசு நிர்வாகத்திடம் எவ்வளவோ முறையிட்டும், அந்த மக்களுக்கான இடுகாட்டு இடத்தை ஒதுக்கி தராமல் அலட்சியம் செய்யப்படுவதாலேயே இந்த அவலம் நேர்வதாக கூறப்படுகிறது. சிலரின் வீடுகள் கல்லறைகளால் நிறைந்துள்ளன. கல்லறைகளின் மீதே அமர்வது மற்றும் நடப்பது உள்ளிட்டவை நிகழ்கின்றன.

“ஏழைகளான எங்களுக்கு இறப்பில்கூட கண்ணியம் கிடைப்பதில்லை” என்று மனம் நொந்து கூறுகின்றனர் அந்த மக்கள். இவர்கள் நிலமற்ற ஏழை முஸ்லீம்கள். மேலும், இவர்களில் பெரும்பாலானோர் ஒப்பந்த தொழிலாளர்களாக வேலை பார்க்கின்றனர்.

சா போகார் கிராமத்திலுள்ள ஒரு குளத்தை ஒட்டி, அவர்களுக்குரிய கல்லறைக்கான இடம் ஒதுக்கப்பட்டாலும், முறையான பணிகள் எதுவும் இன்னும் நிறைவடையவில்லை. பெரும் போராட்டத்திற்கு பின்னர், ஒரேயொருவரை அந்த குளத்தின் அருகே புதைத்தனர். அவ்வளவே…

அதே கிராமத்தில் இந்துக்களுக்கான எரிமேடை தனியாக இருந்தாலும், முஸ்லீம்களுக்கு மட்டும் மயானம் இன்னும் ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்திரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறான அவலங்களுக்கு இந்த கிராமமும் ஒரு சாட்சி..!