திருச்சி: ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு என்று கூறிய  வழக்கறிஞர் புகழேந்தி, தற்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புக்கொண்டுள்ளவர்கள், காவல்துறையினரின் கொடுமையான தாக்குதலை தொடர்ந்தே அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளதாக காவல்துறை மீது குற்றம் சாட்டி உள்ளார்.

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். இவர் கடந்த 2012-ம் ஆண்டு, மார்ச் 29-ம் தேதி அதிகாலை தனது வீட்டிலிருந்து நடைப்பயிற்சிக்குச் சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில், திருச்சி கல்லணை சாலையில் கொடூரமாகக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். ஆனால், குற்றவாளிகள் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. அதனால், தன்னுடைய கணவர் கொலை வழக்கை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் ராமஜெயத்தின் மனைவி லதா. நீதிமன்றத்தின் உத்தரவுப்படி சி.பி.ஐ-யும் விசாரித்தது. ஆனால், குற்றவாளிகள் யாரென்று கண்டுபிடிக்கப்படவில்லை.

இதையடுத்து ராமஜெயத்தின் சகோதரர் கே.என்.ரவிச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவால், இந்த வழக்கு மீண்டும் தமிழ்நாடு காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவு வசம் சென்றது. எஸ்.பி ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார் திருச்சி ராமஜெயத்தின் கொலை வழக்கை விசாரித்து வருகிறார்கள். 10-க்கும் மேற்பட டிஎஸ்பி-க்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துரிதப்படுத்தியது.  இதுவரை நடத்தப்பட்ட விசாரணை அறிக்கைகளை ஆய்வுசெய்த சி.பி.சி.ஐ.டி போலீஸார், புதிய கோணத்திலும் விசாரணை செய்துவருகிறார்கள். கொலை நடந்து பத்தாண்டுகளுக்கு மேலாகிவிட்டதால், குற்றவாளிகளைப் பிடிக்க உண்மை கண்டறியும் சோதனையை மேற்கொள்ள சி.பி.சி.ஐ.டி போலீஸார் முடிவுசெய்தனர். அதன்படி திருச்சி ராமஜெயம் கொலைசெய்யப்பட்ட காலகட்டத்தில் கோலோச்சிய பிரபலமான ரௌடிகளில் 13 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தத் திட்டமிட்டப்பட்டது. அதற்கான அனுமதியையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் நீதிமன்றத்தின் மூலம் பெற்றனர்.

முன்னதாக, இந்த கொலை வழக்கு தொடர்பாக, சந்தேகப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் பிடித்து விசாரணை என்ற பெயரில் கொடுமையாக துன்புறுத்தப்பட்டு ஒப்புக்கொள்ள வலியுறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விஷயத்தில் நீதிமன்றம் மற்றும் மனித உரிமை ஆணையம் தலையிட்டதன்பேரில், அவர்கள் விடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டி உள்ள வழக்கறிஞர் புகழேந்தி காவல்துறைமீது கடுமையான குற்றச்சாட்டுக்களை வீசியதுடன், உண்மை கண்டறியும் சோதனை வெறும் கண்துடைப்பு என்று தெரிவித்துள்ளார்.

ராமஜெயம் கொலை நடந்த காலகட்டத்தில் சந்தேகப்படும் படியான இருந்த 13 ரவுடிகளின் செல்போன் எண்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்தினர். பின்னர் சந்தேகப்படும் 13 நபர்களில் 12 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டு, இதற்காக தடயவியல் நிபுணர்கள் டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.  நேற்று (ஜன 18) டிஜிபி அலுவலகம் அருகே அமைந்துள்ள தடயவியல் அலுவலகத்தில், முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. காலை 10 மணிக்கு தொடங்கிய சோதனையானது மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த சோதனைக்காக திண்டுக்கல் மோகன்ராம், நரைமுடி கணேசன், தினேஷ், சத்யராஜ் உள்ளிட்ட நான்கு பேர் அவர்களது வழக்கறிஞருடன் வந்தனர்.

சோதனை முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் புகழேந்தி, இந்த சோதனைக்காக ஆஜரான ஒவ்வொருவரிடமும் மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும், அதில் 6 கேள்விகள் மட்டுமே கொலை வழக்கு தொடர்புடையது என்றும் தெரிவித்தார். மொத்தம் 12 கேள்விகள் கேட்கப்பட்டு அதை வீடியோ பதிவு செய்துள்ளதாகவும், 12 கேள்விகளை ஒரு நபரிடம் 6 முறை கேட்கப்பட்டதாகவும், 20 நொடிகள் கழித்து மாற்றி மாற்றி கேள்விகளை கேட்டனர் என்றும், அதற்கு ஆம் இல்லை என்று மட்டும் பதிலளித்தால் போதுமானது என அதிகாரிகள் கூறியதாக புகழேந்தி தெரிவித்தார்.

இந்தக் கேள்வி கேட்கப்படும்போது பதில் சொல்பவரின் இதயத்துடிப்பு ஆகியவற்றை கிராஃப்ட் பேப்பரில் குறித்து வைத்து கொள்ளப்படும். மனிதனுக்கு ஈசிஜி சோதனை எடுக்கப்படும் போது, எவ்வாறு அது கிராப் பேப்பரில் அலைகள் போன்று மேலும் கீழுமாக செல்வது போல செல்லும் அதனை வைத்து அவர்கள் உண்மையை சொல்கிறார்களா அல்லது பொய் சொல்கிறார்களா என முடிவு செய்து கொள்வார்கள்.இதன் அடிப்படையில் உண்மை கண்டறியும் சோதனையின் முடிவு அறிக்கை தயாரிக்கப்படும். உண்மை கண்டறியும் சோதனையின் அறிக்கையின் முடிவு இந்த வழக்கில் எந்த பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தாது.

கொலை வழக்குகளில் ஆதாரங்கள் சாட்சியங்கள் தான் மிக முக்கியமானவை உண்மை கண்டறியும் சோதனை மூலம் அவர் உண்மை சொல்லி இருக்கிறார் அல்லது பொய் சொல்லி இருக்கிறார் என்பதை மட்டுமே தெரிந்து கொள்ள முடியும் எனவும் இதனால் எந்த பயனும் இல்லை.

இந்த வழக்கில் நரை முடி கணேஷ் என்பவருடைய செல்போன் எண் கொலை நடந்த சில கிலோமீட்டர் தூரத்தில் உள்ள டவரில் பதிவானது. அதன் மூலமாக மோகன் ராம், தினேஷ், சத்யா உள்ளிட்டவர்களும் தொடர்பில் வருகிறார்கள். அதன் அடிப்படையில் இவர்கள் உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார். தமிழ்நாட்டில் இந்த சோதனை நடத்துவதற்கு வசதி இல்லாத காரணத்தினால் டெல்லியில் இருந்து தடயவியல் நிபுணர் மோசஸ் என்பவர் வரவழைக்கப்பட்டு அவரது தலைமையில் கேள்வியில் கேட்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. இன்று (ஜன 19) நடைபெற உள்ள இரண்டாம் கட்ட உண்மை கண்டறியும் சோதனையில் செந்தில், கலைவாணன், ராஜ்குமார், சுரேந்தர் ஆகிய நான்கு பேர் இந்த சோதனைக்காக ஆஜராக உள்ளனர்.

12 கேள்விகள் விவரம்

 1. உங்கள் பெயர் என்ன?
 2.  `ராமஜெயம் கடத்தப்பட்டபோது நீங்கள் எங்கு இருந்தீர்கள்?’
 3. ராமஜெயத்தை கொலை செய்தது நீங்களா?
 4. உங்களுக்கு பேட்மிண்டன் விளையாடும் பழக்கம் உள்ளதா?
 5. ராமஜெயம் கொலை நாளன்று திருச்சி ரயில் நிலையம் அருகே சென்றீர்களா?
 6. நடப்பது என்ன ஆண்டு?
 7. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட நாளன்று நீங்கள் பயன்படுத்திய சிம்கார்டின் நம்பர் என்ன?
 8. இந்த ஆண்டு ஏதாவது குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளீர்களா?
 9. இதற்கு முன்பாக பொய் சாட்சிக்காக ஆஜராகி உள்ளீர்களா?
 10. ராமஜெயத்தை கொலை செய்தது யார்?
 11. ராமஜெயத்தின் மோதிரத்தை நீங்கள் எடுத்தீர்களா?
 12. ராமஜெயத்தை தாக்கினீர்களா?