சென்னை: டிசம்பர் 15ந்தேதி முதல் ஆந்திர மாநிலம் விஜயவாடா அடுத்த நரசப்பூர்–சென்னை வந்தே பாரத் அதிவேக ரயில் தொடங்கப்படுகிறது. இதை மாநிலங்களுக்கான மத்தியஅமைச்சர், பூபதிராஜு ஸ்ரீனிவாச வர்மா தொடங்கி வைக்கிறார்.
நரசப்பூர்–சென்னை வந்தே பாரத் அதிவேக ரயில் சேவை டிசம்பர் 15, 2025 முதல் தொடங்குகிறது, இது 655 கிமீ தூரத்தை சுமார் 8 மணி 55 நிமிடங்களில் கடந்து, வாரத்தில் 6 நாட்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தற்போது மைசூரு, நரசப்பூர் (விஜயவாடா வழியாக), கோவை, திருநெல்வேலி, மற்றும் நாகர்கோவில் (எழும்பூர் வழியாக) ஆகிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன, இதில் மைசூரு மற்றும் நரசப்பூர் ரயில்கள் சென்னையிலிருந்து புறப்படுகின்றன, மேலும் அவை அதிவேக பயண அனுபவத்தையும் நவீன வசதிகளையும் வழங்குகின்றன.
இதைத்தொடர்ந்து, இந்திய ரயில்வே (IR), நரசப்பூர் மற்றும் சென்னைக்கு இடையே புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்க உள்ளது. இதற்கான அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில், நரசப்பூரிலிருந்து சென்னைக்கான வணிகச் செயல்பாடுகள் டிசம்பர் 15, 2025 முதல் தொடங்குகின்றன.
சென்னை சென்ட்ரலில் இருந்து நரசப்பூருக்கான சேவை டிசம்பர் 17, 2025 முதல் ஆரம்பிக்கும். இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் ஆறு நாட்கள் இயங்கும். இந்தப் புதிய ரயில் சேவை மூலம் இரு நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் வெகுவாகக் குறையும் என்றும், ரயில் இணைப்பு வலுப்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த வந்தே பாரத் ரயில், ஏற்கெனவே இயக்கத்தில் உள்ள 20677/20678 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் விரைவு ரயிலின் நீட்டிப்பாகும்.
ரயில் எண் 20678 விஜயவாடா – டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் வந்தே பாரத் விரைவு ரயில் டிசம்பர் 15, 2025 முதல் நரசப்பூரில் இருந்து இயக்கப்படுகிறது. நரசப்பூர்-சென்னை வந்தே பாரத் ரயில் 655 கிமீ தூரத்தை வெறும் 08 மணி நேரம் 55 நிமிடங்களில் கடக்கும்.
ரயில் எண் 20677 டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் – விஜயவாடா வந்தே பாரத் விரைவு ரயில் டிசம்பர் 17, 2025 முதல் நரசப்பூர் வரை நீட்டிக்கப்படுகிறது
டாக்டர் எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மற்றும் நரசப்பூர் இடையேயான பயணத்தின் போது, இந்த அதிவேக ரயில் மொத்தம் ஏழு நிலையங்களில் நின்று செல்லும். ரேணிகுண்டா சந்திப்பு, நெல்லூர், ஒங்கோல், தெனாலி சந்திப்பு, விஜயவாடா சந்திப்பு, கூடவாடா சந்திப்பு, பீமாவரம் டவுன் ஆகிய ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.
கால அட்டவணை (நேரம்)
ரயில் எண் 20677 (சென்னை சென்ட்ரல் – நரசப்பூர்) -சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் நேரம் காலை 05:30 மணி, நரசப்பூர் வந்தடையும் நேரம் பிற்பகல் 14:10 மணி
ரயில் எண் 20678 (நரசப்பூர் – சென்னை சென்ட்ரல்) – நரசப்பூரில் இருந்து புறப்படும் நேரம் பிற்பகல் 14:50 மணி, சென்னை சென்ட்ரல் வந்தடையும் நேரம் இரவு 23:45 மணி
பயணச்சீட்டு விலை விவரம்
நரசப்பூர் மற்றும் சென்னை இடையேயான பயணத்திற்கான ரயில் டிக்கெட் கட்டணம் வகுப்புகளுக்கு ஏற்ப மாறுபடும்:
ஏசி சேர் கார்: ரூ. 1635, எக்ஸிக்யூட்டிவ் சேர் கார்: ரூ. 3030.
[youtube-feed feed=1]