சென்னை:

டைத்தேர்தல் நடைபெற்று முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி, புதுச்சேரி காமராஜ்நகர் தொகுதிகளுக்காபன வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணி அளவில் தொடங்கியது. பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் புதுச்சேரி காமராஜ்நகர் சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன.

விக்கிரவாண்டி தொகுதியில் 275 வாக்குச்சாவடிகளில்  பதிவான வாக்குகள் விழுப்புரம் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஈ.எஸ். பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் முத்தமிழ்செல்வன், தி.மு.க.சார்பில் புகழேந்தி, நாம் தமிழர் கட்சி சார்பில் கந்தசாமி உள்ளிட்ட 12 பேர் போட்டியிட்டனர்.

நாங்குநேரி சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் ரெட்டியார்பட்டி நாராயணன், தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ரூபி மனோகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ்நாராயணன் உள்ளிட்ட 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

நாங்குநேரி தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற வாக்குப்பெட்டிகள் பாளையங்கோட்டை அரசு பொறியியல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை மையங்களில், வாக்கு எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் கண்காணிக்கும் வகையில் எல்.இ.டி டிவியும் அமைக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 14 மேசைகளில் 22 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இதனிடையே இரண்டு தொகுதிகளிலும் நான்கடுக்கு பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாகு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள், லாஸ்பேட்டை மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள மையத்தில் எண்ணப்படுகின்றன. 32 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சிசிடிவி கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளன. காலை 8 மணிக்கு துவங்கி 11 மேசைகளில் 3 சுற்றுகளாக வாக்குகள் எண்ணப்படுகின்றன.

முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். முன்னணி நிலவரம் குறித்து காலை 9 மணியில் இருந்து தெரியவரும். நாங்குநேரி – விக்கிரவாண்டி மற்றும் காமராஜர் நகர்  இடைத்தேர்தலில்  வெற்றி பெறப்போவது யார் என்பது  நண்பகலுக்குள் தெரிந்து விடும்.