சென்னை: நந்தனம் அரசு ஆண்கள் கலை அறிவியல் கல்லூரி, இரு பாலார் கல்லூரியாக மாற்றம் செய்யப்படுவதாக உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டு உள்ளது.
நந்தனம் அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி, நந்தனம் (Government Arts College for Men, Nandanam), சென்னையின் நந்தனம் பகுதியில் அமைந்துள்ள தன்னாட்சி பெற்ற அரசு ஆடவர் கலைக் கல்லூரி. இது 1948ஆம் ஆண்டிலிருந்து அரசுக் கல்லூரியாக அனைத்து சமயத்தினரும் கற்கும் விதமாக உருமாறியது. இக்கல்லூரியில் கலை, அறிவியல் மற்றும் வணிகத் துறைகளில் பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு பாடத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன. கலைத்துறை பட்டப்படிப்புகளில் தமிழ் இலக்கியம், ஆங்கில இலக்கியம், வரலாறு, பொருளியல் மற்றும் புதியதாக துவங்கப்பட்டுள்ள வணிக மேலாண்மையில் பட்டப்படிப்புகள் உள்ளன. அறிவியல் துறையில் கணினியியல், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பம், மற்றும் விலங்கியல் என ஆறு பட்டப்படிப்புக் கல்வித்திட்டங்கள் உள்ளன. வணிகத்துறையில் வணிக இளங்கலைப் பட்டமும் நிறுவன செயலர் பணிக்கான கல்வித்திட்டமும் கற்பிக்கப்படுகின்றன. மேற்படிப்பு கல்வித்திட்டங்களில் வணிக/அறிவியல் முதுகலை திட்டங்களைத் தவிர நீர் வேளாண்மையிலும் பாடத்திட்டம் உள்ளது. புதியதாக கணிதத்திலும் கணி அறிவியலிலும் முதுகலைப் பட்டப்படிப்பு பாடங்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விலங்கியல் துறை முனைவர் பட்டத்திற்கான ஆய்வுகளை வழங்குகின்றது.
இந்த கல்லூரியில் போதுமான மாணவர் சேர்க்கை இல்லாத நிலையில், அதை இருபாலார் (ஆண்கள், பெண்கள்) கல்லூரியாக மாற்றி அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. 2024-25-ம் கல்வியாண்டில் இளநிலை பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையினை அதிகரிக்கும் நோக்கிலும், அப்பகுதி மாணவிகள் பெருமளவில் பயன் அடையும் வகையிலும் நந்தனம் ஆண்கள் கல்லூரியை இருபாலர் கல்லூரியாக மாற்ற கல்லூரி முதல்வர் கோரியதன் அடிப்படையில் உரிய ஆணை வழங்குமாறு கல்லூரிக் கல்வி இயக்குனர் அரசிடம் கேட்டு இருந்தார்.
கல்லூரிக் கல்வி இயக்குனரின் கருத்துருவினை கவனமுடன் ஆய்வு செய்த அரசு, சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கல்லூரியினை நடப்பு கல்வியாண்டு (2024-25) முதல் இருபாலர் கல்லூரியாக மாற்றம் செய்தும், அக்கல்லூரியின் பெயரை நந்தனம் அரசு கலைக் கல்லூரி என பெயர் மாற்றம் செய்தும் உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் ஆ.கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
2024-25 கல்வியாண்டில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை மற்றும் மாணவியர் பயனடையும் வகையில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இளநிலை படிப்பில் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்து வருவதால், காலி இடங்கள் உயந்து வருவதாலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. முதுநிலை, முனைவர் பட்ட வகுப்புகளில் மாணவிகள் அதிகளவில் சேர்க்கை பெற்று பயின்றுவருவதால் இருபாலர் கல்லூரியாக மாற்றப்படுகிறது.