கூடுதல் வட்டி, இரட்டிப்பு லாபம், சுலபமாக பணம் சம்பாதிப்பது என்று சதுரங்க வேட்டை போல் சாமானியர்களின் ஆசையைத் தூண்டி ஆட்டையைப் போடுபவர்களிடம் உள்ளூர்வாசிகள் மட்டுமன்றி உலகின் பணக்கார நாடுகளில் வசிப்பவர்கள் வரை  இந்த ஆசைவலையில் சிக்கி தங்கள் பணத்தை இழக்கிறார்கள்.

இதில் ‘நண்பன்’ என்ற பெயரில் நண்பன் ஹெட்ஜ் ஃபண்ட், நண்பன் ரியல்டி, நண்பன் வென்ச்சர்ஸ், நண்பன் சோழா, நண்பன் கல்ஃப், நண்பன் இ.எஸ்.ஜி சொல்யூஷன்ஸ், நண்பன் கேர்ஸ், நண்பன் எண்டர்டெய்ன்மெண்ட் என்று ஏகப்பட்ட நிறுவனங்களை உருவாக்கி அமெரிக்க வாழ் இந்தியர்களை குறிவைத்து முதலீட்டு மோசடியில் மூன்று பேர் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

அதானி நிறுவனத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களை ஆதாரத்துடன் கூறிய ஹிண்டன்பர்க் ரிசர்ச் நிறுவனம் தான் ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தின் மீதான மோசடியையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

கோபால கிருஷ்ணன் – மணிவண்ணன் சண்முகம் – சக்திவேல் பழனி கவுண்டர்

கோபால கிருஷ்ணன், மணிவண்ணன் சண்முகம், சக்திவேல் பழனி கவுண்டர் ஆகிய மூன்று தமிழர்கள் இணைந்து அமெரிக்காவில் இருந்து நடத்திவரும் ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனம் அமெரிக்க வாழ் இந்தியர்களைக் குறிவைத்து முதலீடு மோசடி செய்துள்ளதாகவும், 2021 ஏப்ரல் முதல் 130 மில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாகவும் (இந்திய ரூபாய் மதிப்பில் 1,079 கோடி ரூபாய்) ஹிண்டன்பர்க் அறிக்கையை ஆதாரமாக வைத்து அமெரிக்க செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன் (SEC) அமெரிக்க நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அமெரிக்கப் பங்குச் சந்தை இறங்கினாலும், ஏறினாலும் மிக அதிக லாபம் கிடைக்கும் எனப் பலரையும் நம்பவைத்து பொன்ஸி எனப்படும் எம்.எல்.எம். போன்ற சங்கிலித்தொடர் வணிகம் மூலம் மோசடி செய்துள்ள ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்க தேவையான நடவடிக்கை எடுக்க அமெரிக்க அரசிடம் SEC உத்தரவு பெற்றுள்ளது.

‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனர்கள் மூவரும் 350-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் இருந்து 89 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளனர். இது போக, 10 முதலீட்டாளர்களிடம் 39 மில்லியன் டாலர் பெற்றுள்ளனர்.

இந்த பணத்தை எல்லாம் ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனர்களால் நடத்தப்படும் நிறுவனங்களிலேயே முதலீடு செய்துள்ளனர்.

‘ஜி.கே’ – கோபால கிருஷ்ணன்

ஜி.கே எனப்படும் கோபால கிருஷ்ணன் ‘ஜி.கே ஸ்ட்ராட்டஜிஸ்’ என்ற ஒரு புதிய முதலீட்டு யுக்தியைக் கண்டுபிடித்திருப்பதாகவும் அதற்கு காப்புரிமை பெற்றுள்ளதாகவும் கூறி, அதன் மூலம் ஆப்ஷன்ஸ் டிரேடிங்கில் அதிக லாபம் பெற்றுத் தருவதாகவும் முதலீட்டாளர்களை நம்ப வைத்துள்ளார்.

நிதித் துறையில் எந்தவொரு அனுபவமும் இல்லாத கோபால கிருஷ்ணன் பங்குச் சந்தை மீதான அதீத ஆர்வத்தால் 1997 முதல் பங்குவர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தாலும் பெரிய அளவில் லாபம் சம்பாதிக்க முடியவில்லை.

பின்னர் 2001-ம் ஆண்டில் திடீரென ஒரு ‘நிர்வாண நிலை’யை அடைந்த அவருக்கு அதன்பின் தொட்டதெல்லாம் துலங்கியதாகவும் எல்லா நேரத்திலும் 100% லாபம் தரக்கூடிய ஒரு முதலீட்டு யுக்தியைக் கண்டுபிடித்துவிட்டதாகவும் ஒரு நேர்காணலில் கோபால கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஜி.கே.-வின் இந்த ஸ்ட்ராட்டஜிஸ் ஐந்து நிலைகளைக் கொண்டது என்றும் இதன்படி பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அபரிமிதமான லாபம் ஈட்டமுடியும் என்று கூறியுள்ளார். முதல் இரண்டு நிலைகளில் 18% முதல் 30% லாபம் கிடைக்கும் என்றும் நிலை 3 முதல் 5 வரை எப்போதும் 100% லாபம் தொடர்ந்து கிடைக்கும் என்றும் இதன் மூலம் முதலீட்டாளர்கள் அனைவரும் நிர்வாண நிலையை அடையலாம் என்று கூறியுள்ளார்.

தனது இந்த யுக்தியைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க கற்றுத் தருவதற்காக ‘நண்பன் ஃபவுண்டேஷன்’ என்கிற அமைப்பை 2019-ம் ஆண்டில் தொடங்கிய கோபால கிருஷ்ணன். நண்பன் ஃபவுண்டேஷன் இணையதளத்தில் யார் வேண்டுமானாலும் பதிவு செய்து, ஜி.கே யுக்தியின் முதல் இரண்டு நிலைகளையும் வெறும் 10 மணி நேரத்தில் இலவசமாகக் கற்றுக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என ஜி.கே சொல்லி இருக்கிறார்.

பங்குச் சந்தை ஏற்றம், இறக்கம் என எந்த நிலையில் இருந்தாலும், முதலீட்டாளர்களின் அசல் தொகை பாதுகாக்கப்படுவதுடன், 100% லாபமும் கிடைக்கும் என இவர் பேசியதை நம்பி, அமெரிக்க வாழ் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் என பலரும் இவரது நிறுவனத்தில் மில்லியன் கணக்கான டாலர்களை முதலீடு செய்துள்ளனர். அதில்  பெரும்பாலானோர் டல்லாஸ் பகுதியில் வசிக்கும் இந்தியர்களே முதலீடு செய்திருக்கின்றனர்.

அடுத்த சில மாதங்களிலேயே ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ என்ற நிறுவனத்தையும் தொடங்கிய ஜி.கே 2020 ஜூன் மாதம் முதல் நண்பன் நிறுவனம் மூலம் முதலீடுகளைப் பெறத் தொடங்கியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து பல்வேறு நேர்காணல் நிகழ்ச்சிகளை ஏற்படுத்திக் கொண்டு தனது யுக்தி மூலம் அடுக்கடுக்காக தனக்கு கிடைத்த லாபம் குறித்து ஜி.கே. பேசிவந்ததோடு தான் தொடங்கியுள்ள நிறுவனங்களின் பட்டியலையும் வெளியிட்டார்.

தவிர, நண்பன் சோழா நிறுவனத்திற்கு சொந்தமாக அமெரிக்காவில் 35,000 ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அதில் 30 பில்லியன் டாலருக்கு மிகப் பெரிய எல்.என்.ஜி எரிவாயு ஆலை அமைக்கப் போவதாகவும் கூறி ஆலைக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தின் படத்துடன் இணையதளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.

இந்த முதலீடுகள் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனத்துக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, அந்த நிறுவனம் விரிவாக ஆய்வு செய்துள்ளது. அதில் :

எஸ்.இ.சி-யிடம் ‘நண்பன்’ தாக்கல் செய்துள்ள தகவல்படி, 2020 முதல் 1003 முதலீட்டாளர்களிடம் 115 மில்லியன் டாலர் முதலீடுகளைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனம் சுமார் 130 மில்லியன் டாலர் முதலீடுகளைத் திரட்டி பொன்ஸி மோசடி முறையில் புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து பணத்தைப் பெற்று பழைய முதலீட்டாளர்களுக்கு 17.8 மில்லியன் டாலர் லாபமாக வழங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பல மில்லியன் டாலர்களை மூன்று நிறுவனர்களும் சொந்த கணக்கிற்கு மாற்றிக்கொண்டதாக எஸ்.இ.சி-யின் அமலாக்கப் பிரிவு இயக்குநர் குர்பிர் கிரெவால் தெரிவித்துள்ளார்.

110 மில்லியன் டாலருக்கு மேல் நிர்வாக சொத்து மதிப்பு இருந்தால், எஸ்.இ.சி-யிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறையின்படி முதலீட்டு ஆலோசகராக ‘நண்பன் இன்வெஸ்ட்மெண்ட்ஸ்’ என்ற நிறுவனத்தை எஸ்.இ.சி.யிடம் பதிவு செய்த இந்த குழு, பிறகு 2023 மார்ச் மாதத்தில் முதலீட்டு ஆலோசகர் பதிவை வாபஸ் பெற்றுக்கொண்டது.

2022 மார்ச் மாதம் எஸ்.இ.சி-யிடம் நண்பன் தாக்கல் செய்த அறிக்கையில், வெறும் 75.8 மில்லியன் டாலர் மட்டுமே மொத்த சொத்துகளாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

நண்பன் நிறுவனர்கள் தங்களது லாபத்தில் 30% தொகையை நண்பன் ஃபவுண்டேஷனுக்கு வழங்கி தொண்டு பணிகள் செய்வதாக 2021-ம் ஆண்டில் ஒரு பேட்டியில் ஜி.கே தெரிவித்துள்ளார். 2021-ம் ஆண்டிலேயே 100 மில்லியன் டாலர் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், நண்பன் ஃபவுண்டேஷன் தாக்கல் செய்துள்ள விவரங்களின்படி, 2021-ம் ஆண்டில் மொத்தம் 2.26 லட்சம் டாலர் மட்டுமே வந்திருக்கிறது.

தவிர, எல்.என்.ஜி எரிவாயு ஆலை அமைக்க இருக்கும் இடம் என்று நண்பன் சோழா இணையதளத்தில் பதிவிடப்பட்ட படம்  அலாஸ்காவில் உள்ள ஒரு சாதாரண மீனவ கிராமத்தின் படம் என தெரியவந்துள்ளது.

அடுத்தடுத்து பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுள்ள ‘நண்பன்’ நிறுவனம் குறித்து ஹிண்டன்பர்க் நிறுவனம் எஸ்.இ.சி-க்குத் தகவல் கொடுத்தைத் தொடர்ந்து  ‘நண்பன்’ நிறுவனத்தின் சுமார் 130 மில்லியன் டாலர் சொத்துகளை முடக்க கிழக்கு டெக்ஸஸ் மாவட்ட நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றுள்ளதாக எஸ்.இ.சி தெரிவித்துள்ளது.

இப்படி நண்பன் என்ற பெயரில் பல்வேறு போலி நிறுவனங்கள் தொடங்கி அமெரிக்க வாழ் இந்தியர்களின் பணம் சுமார் ரூ. 1000 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்டுள்ளது தற்போது அம்பலமாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.