நாமக்கல்:
உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு (QR Code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் உலக புகழ் பெற்ற ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. ஒற்றை கல்லினால் ஆன 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயரை வழிபட தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நாமக்கல் வருவது வழக்கம்.
இந்நிலையில், பக்தர்கள் வசதிக்காக நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் கியூ ஆர் குறியீடு(QR code) மூலம் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை நேரடியாக கோயில் நிர்வாகத்தின் வங்கி கணக்கிற்கு சென்று விடும்.
அதேபோல் கோயில் கட்டளைத்தரார்கள் மற்றும் பக்தர்கள் செலுத்தும் அபிஷேக கட்டணங்களையும் கியூ ஆர் குறியீடு மூலம் செலுத்தும் வசதியும் ஏற்படுத்தியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு பக்தர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.