சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை சார்பில் ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சுகாதாரத்துறை, நாட்டிலேயே முதல் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, மக்களை தேடி மருத்துவம் உள்பட பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டது.  மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள், மக்களிடையே மேலும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கூறிய பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் , தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் சுகாதாரத் திட்டங்கள், சேவைகளை பொது மக்களிடத்தில் கொண்டு சோ்த்து விழிப்புணா்வை ஏற்படுத்துவதே எங்களது நோக்கம். அதன்படி, ஏற்கெனவே பொது சுகாதாரத் துறைக்கென பிரத்யேக யூ-டியூப் சேனல் இயங்கி வருகிறது. தற்போது, அடுத்த கட்டமாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் முழுமையான செயல்பாடுகளை விளக்கும் வகையில் ‘நலம் 365’ சேனல் தொடங்கப்பட்டுள்ளது. . இதன் மூலம் துறை சாா்ந்த முழுமையான தகவல்கள் அனைத்தும் மக்களிடையே கொண்டு சோ்க்கப்படும் என்றாா் அவா்.

இந்த நிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறைக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ‘நலம் 365’ யூ-டியூப் சேனலை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்  இன்று மக்கள் பயன்பாட்டுக்கு தொடக்கி வைத்தார்.

தமிழக மருத்துவ துறையின் கட்டமைப்பை மேம்படுத்தும் நோக்கோடும் தமிழக மக்களின் மருத்துவ தேவைகளை முழுமையாய் நிறைவேற்றிடும் வகையிலும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று நலம் 365 youtube சேனல் துவக்கி வைக்கப்பட்டது.

இந்த சேனலில், மாநில சுகாதார நலத் திட்டங்கள், மருத்துவக் கல்வி நடவடிக்கைகள், ஊரக மருத்துவ சேவைகள், தொற்று நோய் விழிப்புணா்வு, தடுப்பூசி திட்டங்கள் உள்ளிட்டவை குறித்த தகவல்கள் அதில் பகிரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்,  கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு ரூ.4000 ஊதிய உயர்வுடன் மாற்றுப்பணி வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.  மேலும், வெளிநாட்டில் இருந்து வந்த 13 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 13 பேரில் யாருக்கும் BF.7 பாதிப்பு இல்லை. கொரோனாவின் வீரியம் அதிகரித்தால், மத்திய  அரசின் வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.