நாக்பூர்: மகாராஷ்டிரா மாநில மக்களின் ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் தன்னாலான உதவியாக முன்னாள் ஆரஞ்சு பழ வியாபாரியும், தற்போதைய தொழிலதிபருமான நாக்பூரை சேர்ந்த பியாரே கான் ரூ 85 லட்சம் மதிப்பிலான ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

1995 ஆம் ஆண்டில் நாக்பூர் ரயில் நிலையத்திற்கு வெளியே ஆரஞ்சு பழ விற்பனை செய்து வந்தவர் பியாரே கான். தனது கடுமையான உழைப்பின் மூலம் முன்னேறியவர், தற்போது போக்குவரத்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த ரூ 400 கோடி மதிப்பிலான நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள ஆக்சிஜன் தட்டுப்பாட்டை போக்கும் வகையில், சுமார் 400 மெட்ரிக் டன் மருத்துவ திரவ ஆக்ஸிஜனை நாக்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ 85 லட்சம் என்று கூறப்படுகிறது.
பியாரே கானின் முயற்சியில் 116 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் நாக்பூரில் உள்ள எய்ம்ஸ், அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (ஜி.எம்.சி.எச்) மற்றும் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (ஐ.ஜி.சி.எம்.சி.எச்) ஆகியவற்றிற்கு கிடைத்தது.
பெங்களூரில் இருந்து இரண்டு கிரையோஜெனிக் எரிவாயு டேங்கர்களை வாடகைக்கு எடுக்க பியாரே கான் மூன்று மடங்கு அதிகமாக பணம் கொடுத்தார்.
நாக்பூரில் அதிகரித்து வரும் இறப்பு விகிதத்தின் மத்தியில் ஆக்ஸிஜனுக்கான தேவை அதிகரித்ததால், பியாரே கான் டேங்கர்களுக்கான சந்தை விலையை விட ரூ .14 லட்சம் அதிகமாக செலுத்தினார். இதுமட்டுமின்றி, ராய்ப்பூர், ரூர்கேலா, பிலாய் போன்ற இடங்களில் இருந்து ஆக்ஸிஜன் நிரப்ப டேங்கர்கள் ஏற்பாடு செய்ததுடன், தனது அஷ்மி ரோட் கேரியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த 1,200 க்கும் மேற்பட்டவர்களை,. அதற்காக பயன்படுத்தி தீவிரமாக செயலாற்றினார்.
ஆனால், இந்த உதவி குறித்து பியாரே கான் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டதுடன், இக்கட்டான இந்த சூழலில், மனிதாபிமான அடிப்படையில் உதவியை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]