அருள்மிகு வீரபத்திரசுவாமி (வழிக்கரையான்) திருக்கோயில்,  வழுவூர்,  நாகப்பட்டினம் மாவட்டம்.
தாருகாவனத்தில் வசித்த ரிஷிகள், தங்களது யாகத்தால் கிடைக்கும் அவிர்பாகத்தால்தான் தேவர்களே வாழ்கின்றனர் என்று கர்வம் கொண்டனர். அவர்களது ஆணவத்தை அடக்க எண்ணிய சிவன், கையில் பிச்சைப்பாத்திரத்துடன் பிட்சாடனாராக அங்கு வந்தார். திருமால், மோகினி வேடத்தில் அவருடன் சேர்ந்து கொண்டார். மோகினி வடிவிலிருந்த திருமாலைக் கண்ட ரிஷிகள், அவளது அழகில் மயங்கி, தாங்கள் செய்த யாகத்தை விட்டுவிட்டு அவரைப் பின்தொடர்ந்தனர். பிட்சாடனார் வடிவிலிருந்த மிக அழகிய சிவனைக் கண்ட ரிஷிபத்தினிகள், தங்களது நிலை மறந்து அவர் பின் சென்றனர். பின்னர், தங்கள் நிலை உணர்ந்த ரிஷிகள், வந்திருப்பவர்கள் இறைவன் என அறியாமல், சிவன் மீது அக்னி, புலி, மான், மழு, நாகம் என பல ஆயுதங்களை எய்து போரிட்டனர்.
சிவன் அவற்றையெல்லாம் அடக்கி, தனது ஆபரணங்களாக்கிக் கொண்டார். முனிவர்கள் ஒரு யானையை அனுப்பினர். அதன் தோலைக் கிழித்த சிவன், கஜசம்ஹார மூர்த்தியாக காட்சி தந்தார். ரிஷிகளின் ஆணவம் அடங்கியது. பின்பு அவர்கள் உண்மையை உணர்ந்து சிவனைச் சரணடைந்தனர். சிவன் அவர்களை மன்னித்தருளினார். மோகினி வடிவில் இருந்த திருமாலுக்கும், சிவனுக்கும் சாஸ்தா பிறந்தார். அவரது பாதுகாப்பிற்காக சிவன், தனது அம்சமான வீரபத்திரரை காவலுக்கு வைத்துவிட்டுச் சென்றார். இந்த வீரபத்திரரே இத்தலத்தில் காட்சி தருகிறார். பால சாஸ்தாவும் இங்கிருக்கிறார்.
வீரபத்திரரை “வழித்து ணையான், வழிக்கரையான்” என்ற பெயர்களில் அழைக்கின்றனர். இவர் அமர்ந்த கோலத்தில் இருக்கிறார். பைரவருக்கு நாய் வாகனம் இருப்பது வழக்கம். இங்கு வீரபத்திரருக்கு நாய் வாகனம் இருக்கிறது. திருமாலுக்குப் பிறந்த சாஸ்தாவைக் காக்க வந்தவர் என்பதால் இவரது நெற்றியில் திருமாலுக்குரிய நாமம் இடுகின்றனர். சிவனுக்குரிய விபூதியை பிரசாதமாக தருகின்றனர்.
இவரைத் தவிர மற்றொரு வீரபத்திரர் நின்ற கோலத்தில் உள்ள சன்னதி இருக்கிறது. அருகில் தூண்டிவீரன், வாகையடியான், லாடசன்னாசி, உத்தாண்டராயர், பெத்தாரணசுவாமி ஆகிய காவல் தெய்வங்கள் இருக்கின்றனர்.  பாலசாஸ்தா சன்னதி முன் மண்டபத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர், அகோர வீரபத்திரர் இருக்கின்றனர். பிறக்கும் குழந்தைகள் நோயின்றி இருக்கவும், அவர்கள் கல்வியில் சிறக்கவும் இக்கோயிலில் பூஜை செய்து வேண்டிக்கொள்கிறார்கள்.
இக்கோயிலுக்கு அருகிலுள்ள கஜசம்ஹாரமூர்த்தி கோயிலில் (அட்ட வீரட்டத்தலம்), பிட்சாடனாராக வந்த சிவன், மோகினி வேடத்தில் வந்த திருமால் இருவரையும் தரிசிக்கலாம். இங்கு வீரபத்திரர் சுதையால் ஆன விக்ரகத்தில், அமர்ந்த, நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். வீரபத்திரருக்கு நாம அலங்காரம் செய்யப்படுகின்றது.
திருவிழா:
மாசியில் 10 நாட்கள் விழா.
வேண்டுகோள்:
குழந்தைகள் ஆரோக்யமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கவும், அவர்கள் கல்வியில் சிறக்கவும் இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள்.
நேர்த்திக்கடன்:
சுவாமிக்கு சர்க்கரைப்பொங்கல் படைத்து, விசேஷ பூஜை செய்து நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.