அருள்மிகு உச்சிரவனேஸ்வரர்  திருக்கோயில், திருவிளநகர், நாகப்பட்டினம் மாவட்டம்

முன்னொரு காலத்தில் அருள்வித்தன் என்பவன் இத்தல இறைவன் மீது அளவில்லாத பக்தி கொண்டிருந்தான். இவன் தினமும் திருப்பள்ளி எழுச்சி பூஜைக்காக, கூடை நிறைய பூ எடுத்துக்கொண்டு ஆற்றைக்கடந்து வருவான். இவனது பக்தியை சோதிக்க விரும்பினார் இறைவன். ஒருநாள் இவன் பூக்கூடையுடன் ஆற்றைக்கடந்து வரும்போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தோடச்செய்தார்.

இதனால் கலங்கிய இவன் தன்னைப்பற்றி கவலைப்படாமல் இறைவனுக்குரிய பூக்கூடையைக் காப்பாற்றுவதில் மிகவும் கவனமாக இருந்தான். ஆற்றின் கரையை நோக்கி செல்ல போராடினான். இதனால் இறைவனது திருப்பள்ளி எழுச்சிக்கு பூவை கொண்டு செல்லக் காலதாமதம் ஏற்பட்டுவிடுமோ என பயந்தான். இறைவனைப் பிரார்த்தித்தான்.

இவனது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் ஆற்றின் துறையைக் காட்டி உதவினார். அருள்வித்தனின் பெருமை உலகிற்கு தெரிந்தது. இதனால் இறைவன் “துறை காட்டும் வள்ளல்” ஆனார். முன் காலத்தில் இப்பகுதி முழுவதும் விழர் செடிகள் அடர்ந்து இருந்ததால் “விழர் நகர்” எனப்பட்டது.

இது காலப்போக்கில் “திருவிளநகர்” ஆனது. திருஞான சம்பந்தர் கடைமுடி முதலிய தலங்களுக்கு சென்று மயிலாடுதுறை வரும் வழியில் காவிரியாறு கரைபுரண்டு ஓடியது. அப்போது வழிதெரியாமல் திண்டாடிய சம்பந்தர்,”இங்கு துறைகாட்டுவோர் யாரேனும் உளரோ” என்று கேட்க இறைவன் வேடனாக தோன்றி, துறைகாட்டி அக்கரை சேர உதவி செய்தார்.

கிழக்கு நோக்கிய 5 நிலை ராஜகோபுரமும், இரண்டு பிரகாரங்களும் உள்ளன. ராஜகோபுரத்தை அடுத்து பலிபீடம், நந்தி, ஆஸ்தான மண்டபம் அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் வடபுறத்தில் அம்மன் தென்புறம் நோக்கி அருள்பாலிக்கிறார். சிவன் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

சுற்றுப்பிரகாரத்தில் தெட்சிணாமூர்த்தி, திருமால், பிரம்மா, துர்க்கை, விநாயகர், சோமாஸ்கந்தர், நால்வர், கஜலட்சுமி, நடராஜர், நவகிரகங்கள், சனிபகவான், பைரவர், சூரியன் ஆகியோர் அருளுகின்றனர். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். அம்மன் வேயுறுதோளியம்மை சங்கு, சக்கரத்துடன் பக்தர்களை காப்பாற்றுவதற்கு தயார் நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.

திருவிழா:

மகா சிவராத்திரி.

பிரார்த்தனை:

எந்தவித பிரச்னையாக இருந்தாலும் இங்கு வந்து தரிசனம் செய்தால் விரைவில் நீங்கிவிடும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் தலவிருட்சமான விழல் செடியில் முடிச்சு போட்டு வேண்டிக்கொண்டால் விரைவில் பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற பண உதவி, நிரந்தரமாக தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கிக் கொடுத்தல் போன்ற வழிபாடு செய்கின்றனர்.

வழிகாட்டி:

மயிலாடுதுறை பொறையாறு சாலையில் மயிலாடுதுறையிலிருந்து 6 கீ.மீ தொலைவில் உள்ளது. பேருந்து சாலையின் அருகிலேயே கோயில் உள்ளது