வேதராஜன் திருக்கோயில், திருநகரி, நாகப்பட்டினம் மாவட்டம்

பிரம்மாவின் புத்திரன் கர்த்தம பிரஜாபதி பெருமாளிடம் மோட்சம் வேண்டி இத்தலத்தில் கடும் தவம் செய்தான். இவனுக்கு தரிசனம் தரப் பெருமாள் தாமதம் செய்ததால், வருத்தமடைந்த லட்சுமி பெருமாளிடம் கோபம் கொண்டு, இத்தலத்தில் குளத்தில் இருந்த தாமரை மலருக்குள் ஒளிந்து கொண்டாள். பெருமாள் லட்சுமியை தேடி இத்தலம் வந்து லட்சுமியை ஆலிங்கனம் செய்து கொண்டார். அருகிலுள்ள திருவாலியிலும் இதேபோல் ஆலிங்கன கோலத்தில் இருப்பதால், இரண்டும் சேர்த்து திருவாலி–திருநகரி ஆனது.

திரேதாயுகத்தில் பிரஜாபதி உபரிசிரவசு மன்னனாகப் பிறந்தான். இவன் இத்தலத்தின் மீது புஷ்பக விமானத்தில் பறந்து வரும்போது இவ்விடத்தில் பறக்காமல் அப்படியே நின்றுவிட்டது.

எனவே, இத்தலம் மிகவும் புண்ணியமானது எனக்கருதி தனக்கு மோட்சம் வேண்டிப் பெருமாளிடம் தவம் செய்தான். கிடைக்கவில்லை. அடுத்த யுகத்தில் சங்கபாலன் என்ற பெயரில் ஒரு மன்னனின் மந்திரியாகப் பிறந்தான். அப்பிறவியிலும் தனக்கு மோட்சம் கேட்க, பெருமாள் கலியுகத்தில் கிடைக்கும் என கூறினார்.

கலியுகத்தில் நீலன் என்ற பெயரில் ஒரு படைத்தலைவனின் மகனாக பிறந்தான். இவன் திருவாலியில் வசித்த குமுதவல்லி நாச்சியாரை திருமணம் செய்ய நினைத்தான். அவள்,”ஓராண்டிற்கு தினமும் ஆயிரம் வைஷ்ணவர்களுக்கு அன்னதானம் செய்தால் நான் உங்களுக்கு மனைவியாவேன்” என்று நிபந்தனை விதித்தாள். இந்த அன்னதானத்திற்கு பொருள் தீர்ந்த பிறகு நீலன் வழிப்பறியில் ஈடுபட்டான்.

அந்த நேரத்தில் பெருமாள் லட்சுமியைத் திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது, நீலன் மறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் நீலனின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். இவ்வாறு திருவாலியின் வரலாற்றிற்கும் திருநகரியின் வரலாற்றிற்கும் ஒரே வரலாறு உள்ளது.

திருமங்கையாழ்வார் இத்தலத்தில் தனி சன்னதியில் திருஞானசம்பந்தர் கொடுத்த வேலுடன் காட்சி தருகிறார். இவருக்கு எதிரே ஒரு கொடிமரமும், பெருமாளுக்கு எதிரே ஒன்றும் என இரண்டு கொடி மரங்கள் உள்ளன. பெருமாளின் 108 திருப்பதிகளில் ஒன்று மேற்கு பார்த்து வீற்றிருந்த திருக்கோலம்.

இங்கு மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அஷ்டாட்சர விமானம் எனப்படும்.

திருவிழா:

வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.

பிரார்த்தனை

ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் பெருமாளுக்குத் திருமஞ்சனம்செய்து, வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

வழிகாட்டி:

சீர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் வழியில் 9 கி.மீ., தூரத்தில் உள்ள திருவாலியிலிருந்து 2 கி.மீ., தூரத்தில் திருநகரி உள்ளது.