மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் இனவாத கலவரம் முடிவுக்கு வரவேண்டும் என்ற கோரிக்கையுடன் நாகாலாந்து மாநில தலைநகர் கோஹிமா-வில் மாணவர் அமைப்பினர் நேற்று மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய வடகிழக்கு மாணவர்கள் அமைப்பின் (NESO) பொதுச் செயலாளர் முட்ஷிக்ஹோயோ யஹோபு “மணிப்பூர் மாநிலத்தில் இன அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது இதில் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

அண்டை மாநிலத்தில் நடைபெறும் இந்த சம்பவம் நாகாலாந்து மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு சில ரகசிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மணிப்பூர் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் பார்த்தார். 40,000 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் காவல்துறையினருடன் இணைந்து செயல்படுகிறார்கள்.

ஆனால் அவர்களால் இன்னும் கொலை மற்றும் நாசவேலைகளை நிறுத்த முடியவில்லை, வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதில் மத்திய அரசு நடுநிலையாக செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது” என்று கூறினார்.

மேலும், NESO அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் சண்டையால் பாதிக்கப்பட்ட மணிப்பூருக்குச் சென்று இரு சமூகத்தினரையும் சந்தித்து வன்முறையை கைவிட கோரிக்கை வைக்கப்போவதாக கூறினார்.

மணிப்பூர் வன்முறையில் பிரதமர் மோடியின் மௌனம் வடகிழக்கு பிராந்தியத்தில் உள்ள பழங்குடியின மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்று கூறிய அவர் இந்த விவகாரத்தில் மத்திய அரசு தீவிரமாக செயல்படவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.