நாகை:
நாகை தொகுதி எம்.எல்.ஏ.வும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்றார்.
தற்போது ஓ.பன்னீர்செல்வம் – சசிகலா இடையே நடைபெறும் அதிகாரப்போட்டியில் எவர் பக்கமும் சேராமல் இருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து முடிவெடுக்க மக்கள் கருத்தை அறிய விரும்புவதாக தெரிவித்த அவர், நாகையில் உள்ள தனது அலுவலகத்தில் ஓட்டு பெட்டி போல ஒன்றை வைத்தார்.
அதில் தங்கள் விருப்பத்தை மக்கள் தெரிவிக்கலாம் என்று அறிவித்தார். இதையடுத்து இன்று அவரது கட்சி அலுவலகத்துக்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் விருப்பத்தை அறிய வந்தார்கள்.
பலரும் தங்கள் விருப்பத்தை பதிவு செய்தனர்.
நேரம் ஆக ஆக கூட்டம் பெருகியது. இந்த நிலையில் திடீரென கருத்து கேட்பு நிறுத்தப்பட்டது. அங்கிருந்த பொதுமக்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அகற்றினர். எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரியும் அவசரமாக கிளம்பி எங்கோ சென்றுவிட்டார்.
இது மக்களை ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. “சக்தி வாய்ந்த இடத்திலிருந்து மிரட்டல் வந்ததால் மக்கள் கருத்து கேட்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார் எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி” என்று நாகை மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.