நாகை:

வேதாரண்யத்தில் அமரர் ஊர்தி இல்லாததால் சடலத்தை தோளில் சுமந்து எடுத்துச் சென்ற சம்பவம் தொடர்பாக அரசு தலைமை மருத்துவர் விளக்கம் அளிக்க மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

வடமாநிலங்களில்தான் இதுபோன்ற கொடுமையான சம்பவங்கள் நடைபெறுவதுண்டு. ஆனால், தற்போது தமிழகத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டத்தில் உள்ள வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் இறந்தவர்களை கொண்டுசெல்லும் அமரர் ஊர்தி இல்லாததால், 6 கிலோ மீட்டர் தொலைவுக்கு  இறந்தவரின் உடலை, அவரது உறவினர்கள்  தூக்கிச்சென்றனர்.

வேதாரண்யம் அரசு  மருத்துவமனையில் அமரர் ஊர்தி இல்லாததால், இறந்தவரின் உடலை எடுத்துச்செல்ல முடியாத நிலையில், வேறு வழியின்றி  உடலை மருத்துவமனையிலிருந்து சொந்த ஊருக்கு அவரது உறவினர்கள்  தூக்கிச் சென்றனர்.

இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து ஆட்சியரின் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது.

அதைத்தொடர்ந்து. வேதாரண்யம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவருக்கு ஆட்சியர் சுரேஷ்குமார் விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பி உள்ளார்.