மதுரை:
மதுவுக்கு எதிராக போராடி வரும் நந்தினியும் அவருடைய தந்தை ஆனந்தனையும் விடுதலை செய்ய வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் அறிவித்த சட்டக்கல்லூரி மாணவியும், நந்தினியின் தங்கையுமான நிரஞ்சனா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2014ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக்கிற்கு எதிராக தனது தந்தை ஆனந்தனுடன் இணைந்து போராட்டம் நடத்தி வருபவர் வழக்கறிஞர் நந்தினி. இவர்கள்மீது திருப்பத்தூர் காவல் நிலையத் தில் வழக்கு பதியப்பட்ட வழக்கின் விசாரணை நடந்தபோது, டாஸ்மாக் மூலம் போதைப்பொருள் விற்பது குற்றமில்லையா என நீதிபதியிடம் எதிர்த்து வாதாடியதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக, அவர்மீதும், அவரது தந்தை மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டு இருவரையும் சிறையில் அடைக்க நீபதிபதி உத்தரவிட்டார். அவர்கள் சிறையில் உள்ள நிலையில், ஜூலை 5ம் தேதி நந்தினிக்கு நிச்சயக்கப்பட்டிருந்த திருமணம் நின்று போனது.
இதன் காரணமாக, அவரது குடும்பத்தினர் நிலைகுலைந்து போன நிலையில், நந்தினியின் தங்கையும், சட்டக்கல்லூரி மாணவியுமான நிரஞ்சனா, தனது சகோதரி நந்தினியை விடுவிக்க வலியுறுத்தி இன்று மதுரை சட்டக்கல்லூரி முன்பு காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் நந்தினியின் தங்கை நிரஞ்சனாவை கைது செய்து அழைத்துச் சென்றனர்.