
‘நேர்கொண்ட பார்வை’ படத்தைத் தொடர்ந்து நடிகர் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். அவரின் 60-வது படமாக உருவாகி வரும் இதனையும் இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
மொத்த படப்பிடிப்பையும் நிறைவுசெய்து தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்திவருகிறது.
இதற்கிடையே ‘வலிமை’ படத்தில் இடம்பெற்றுள்ள ‘நாங்க வேற மாதிரி…’ என்ற பாடல் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இப்பாடலுக்கான வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் எழுத, யுவன்ஷங்கர் ராஜாவும் அனுராக் குல்கர்னியும் இணைந்து பாடியிருந்தனர். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் பாடல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகிவந்த நிலையில், தற்போது யூடியூப் தளத்தில் 25 மில்லியன் பார்வைகளைக் கடந்து ’25 மில்லியன் பார்வைகள்’ என்ற சாதனை மைல்கல்லைத் தொட்டுள்ளது. இந்த மகிழ்ச்சியை அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்திவருகின்றனர்.