சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டமான நான் முதல்வன் என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று  தொடங்கி வைத்தார். தனது 69வது பிறந்த நாளையொட்டி, “நான் முதல்வன் – உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இன்று 69வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் மு.க.ஸ்டாலின்,  “நான் முதல்வன்” என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை சென்னை கலைவாணர் அரங்கில்  தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில்  பேசிய முதலமைச்சர் மு.க.  ஸ்டாலின், “மாணவர்கள், இளைஞர்களை முதல்வனாக மாற்றுவதே நான் முதல்வன் திட்டத்தின் நோக்கம். படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. ஆனால், அதற்கான தகுதி பற்றாக்குறையாக உள்ளது; இளைஞர் சக்தி குறைபாடுடைய சமுதாயமாக உள்ளது. மாண வர்கள் படித்திருக்கிறார்கள்; ஆனால் போதிய திறமை இல்லை. அவர்களின் திறமை குறைவு பற்றி கவலைப்பட வேண்டிய சூழலில் நாம் தத்தளித்துக் கொண்டுள்ளோம்.  அதை நீக்கவே நான் முதல்வன் திட்டம்.

கல்லூரி பட்டத்தை தாண்டி தனித்திறமை இருந்தால்தான் போட்டி நிறைந்த உலகில் வெல்ல முடியும்; இந்தியாவின் இளைய சக்தியைப் பார்த்து உலக நாடுகள் அஞ்சுகின்றன.இளைஞர்கள் அனைவரும் அனைத்துவிதமான தகுதியும், திறமையும் பெற்று முன்னேறி அனைத்திலும் முதல்வனாக வரவேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், ” படிப்பு என்பது பட்டம் சார்ந்ததாக இல்லாமல், திறமை சார்ந்ததாக மாற வேண்டும்; வேலை என்பது சம்பளம் சார்ந்ததாக இல்லாமல் திறன் சார்ந்ததாக மாற வேண்டும். பெற்ற தாய் போல மாணவர்கள், இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்ட திட்டம்தான் நான் முதல்வன் திட்டம்” என்று விளக்கம் அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச்செயலாளர் இறையன்பு, காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் கலந்துகொண்டனர்.