சென்னை: நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிங்கப்பூரில் இருந்து நாடு கடத்தப்பட்டார். இது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது அடையாள அட்டையில் பொறிக்கப்பட்டிருந்த விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் படமே, அவர் நாடு கடத்தப்படுவதற்கு காரணமாக அமைந்தது தெரிய வந்துள்ளது.

உலகின் பல நாடுகள் விடுதலைப்புலி இயக்கத்தை தடை செய்துள்ள நிலையில், அவரது படத்தை வைத்திருந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த இளைஞரை, சிங்கப்பூர் நாடு வெளியேற்றி உள்ளது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் சிங்கப்பூர், மலேசியாவில் வசித்து வருகின்றனர். அங்கு பல நிறுவனங்களிலும் ஏராளமானோர் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் குமரேசன் என்ற இளைஞர்  கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியில் உறுப்பினராக உள்ளார்.

சிங்கப்பூரில் நாம் தமிழர் கட்சி செயல்பாடுகள் கடந்த சில காலமாகவே முடக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை. இந்த நிலையில்தான் குமரேசனிடம்  உள்ள நாம் தமிழர் கட்சி அடையாள அட்டையில் பிரபாகரன் படம இடம்பெற்றுள்ளது அந்நாட்டு காவல்துறைக்கு தெரிய வந்துள்ளது.

அதைத்தொடர்ந்து, குமரேசனை  கைது செய்த அந்நாட்டு காவல்துறையினர்,  நீ ஒரு தீவிரவாதியா, தமிழர்களை ஒன்றிணைத்து போராட்டத்தில் ஈடுபட நினைக்கிறாயா என தொல்லைக்கொடுத்து, விசாரணை நடத்தி உள்ளனர்.  அதன்பிறகே குமரேசன்   சிங்கப்பூர் வெளியுறவுத்துறை தடை விதித்துள்ளது. அதைத்தொடர்ந்து அவர் நாடு கடத்தப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சிங்கப்பூர் அரசு குமரேசனுக்கு வாழ்நாள் தடை விதித்து இந்தியாவிற்கு நாடு கடத்தியது  விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் குமரேசன்  இனி அவர் சிங்கப்பூர் செல்ல முடியாது.

இதுகுறித்து குமரேசனின் தந்தை,   சீன நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கும் குமரேசனுக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதைத்தொடர்ந்தே குமரேசனை கைது செய்து டார்ச்சர் செய்த காவல்துறையினர்,   அவரது வங்கி கணக்குகளை முடக்கி அவரை சிங்கப்பூர் நாட்டில் இருந்து இந்தியாவிற்கு வெளியேற்றி உள்ளனர் என  தெரிவித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்,  சிங்கப்பூர் நாட்டில் ஏராளமான தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் அதிக அளவில் இருந்து வருகின்றனர். அதே நேரத்தில் சிங்கப்பூர் நாட்டில் இதுவரை 400 நாம் தமிழர் கட்சி உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து நான் பேசி வருகிறேன் தற்பொழுது குமரேசன் சிங்கப்பூர் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு இருப்பது மிகுந்த வேதனை அளிக்கிறது என தெரிவித்து உள்ளார்.