மும்பை: டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் நாமக்கல்லைச் சேர்ந்த என் சந்திரசேகரன் (வயது58) 2-வது முறையாக ஒருமனதாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதறக்கு சந்திரசேகரன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
டாடா சன்ஸ் நிர்வாகக் குழுவில் அக்டோபர் 2016ல் சேர்ந்த சந்திரசேகரன், ஜனவரி 2017ல் டாடா சன்ஸ் நிறுவனத்தின் சேர்மன் ஆகப் பணியைத் துவங்கினார். இதைத் தொடர்ந்து டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டாடா பவர், டிசிஎஸ் போன்ற அனைத்து முக்கிய நிறுவனத்தின் நிர்வாகப் பொறுப்பை ஏற்றார். இதையடுத்து இந்நிறுவனங்கள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளன. டாடா நிறுவனப் பங்குகளின் வளர்ச்சியின் மூலம் வெளிப்படையாகத் தெரிகிறது. ஏர் இந்தியா உட்படப் பல நிறுவன கைப்பற்றல் மூலம் வர்த்தகம் பெரிய அளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது
தற்போது சந்திரசேகரனின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய தலைவர் நியமனம் குறித்து, டாடா குழுமத்தின் தலைமை அலுவலகமான பாம்பே ஹவுஸ்-ல் முக்கியமான உயர்மட்ட நிர்வாகக் குழு நடந்தது. இந்த கூட்டத்தில், நீண்ட காலத்திற்குப் பின் டாடா குழுமத்தின் சேர்மன் எமரிட்டஸ் ஆன ரத்தன் டாடாவும் கலந்துகொண்ததால், இன்றைய கூட்டம் மேலும் முக்கியத்துவம் பெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட டாடா குழுமத்தின் மிகப்பெரிய பங்குதாரரான டாடா டிரஸ்ட் நிறுவனத்தின் தலைவரான ரத்தன் டாடா கூறுகையில் என் சந்திரசேகரன் தலைமையில் டாடா குழுமத்தின் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் குறித்து ரத்தன் டாடா திருப்தி அடைந்துள்ளதாகத் தெரிவித்துப் பணிகாலம் நீட்டிக்கப் பரிந்துரை செய்தார். இதையடுத்து, கூட்டத்தின் முடிவில் என்.சந்திரசேகரன் பணியைப் பாராட்டி மீண்டும் டாடா சன்ஸ் சேர்மன் பதவியில் மீண்டும் அமர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
இதன் மூலம் என்.சந்திரசேகரன் எவ்விதமான எதிர்ப்பும் இல்லாமல் அனைவரின் ஒப்புதலுடன் மீண்டும் டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அடுத்த 5 வருடம் பணியாற்ற உள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சந்திரசேகரன் கடந்த ஐந்து ஆண்டுகளாக டாடா குழுமத்தை வழிநடத்தியது ஒரு பாக்கியம், மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு டாடா குழுமத்தை அடுத்தக் கட்டத்தில் வழிநடத்தும் வாய்ப்பை பெற்றதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.