டெல்லி: மாநிலத்தின் நிலையான வளர்ச்சியில்  இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது. ஏற்கனவே சுகாதாரத் துறையில் நாட்டிலேயே 2வது இடத்தில் தமிழ்நாடு இருப்பதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது மாநிலத்தின் வளர்ச்சியில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் மத்திய திட்டக்குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்டுள்ள  குழுவே நிதி ஆயோக் (NITI – National Institution for Transforming India) இந்த குழு மோடி தலைமையிலான பாஜக ஆட்சி அமைந்த பிறகு, 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் தேதியிலிருந்து செயல்பட்டு வருகிறது. நாட்டின் நிதி, சுகாதாரம், பொருளாதாரம் உள்பட அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தி, அதன்  வளர்ச்சியின் கட்டங்களில் முக்கிய வழிகாட்டுதலையும் வியூக உள்ளீடுகள் குறித்து ஆய்வு செய்து, ஆலோசனைகளையும்  இந்த குழு வழங்கி வருகிறது.

நிதி ஆயோக் தற்போது  இந்தியாவில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின்   வளர்ச்சி நிலை குறித்து ஆய்வு செய்து தரவரிசை பட்டியல் ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை, நிதி ஆயோக் மற்றும் மத்திய அரசு  இணைந்து தயாரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளதுட்ன்.  இந்தியாவில் மாநிலங்களின் கல்வி, உட்கட்டமைப்பு, பொருளாதாரம், சமூக முன்னேற்றம் உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு  மாநிலங்களின் வளர்ச்சிக் குறியீட்டை  தரவரிசைப் படுத்தி இருப்பதாக விளக்கம் தெரிவித்துள்ளது.

இந்த பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, சமூக முன்னேற்றம்  என நிலையான வளர்ச்சி இலக்குகளை செயல்படுத்துவதில், இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக திகழ்வதாக  நிதி ஆயோக் தெரிவித்துள்ளது. மேலும்,  பொருளாதாரம்,  வளர்ச்சி ஆகிய துறைகளில்   தமிழகத்தின் வளர்ச்சி வலுவாக இருப்பதாகவும் பாராட்டு தெரிவித்துள்ளது.