திண்டுக்கல்,
ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ளது மோதுபட்டி கிராமத்தில் களத்துகாடு வேலுச்சாமி என்பவரது தரிசு நிலத்தில் இன்று திடீரென வானத்தில் இருந்து உருளை வடிவிலான ஒருபொருள் தீ புகையுடன் பயங்கர சத்தத்துடன் தரிசு நிலத்தில் விழுந்தது.
இதனால் அந்த பகுதியில் இருந்த பொதுமக்கள் பீதி அடைந்தனர். சற்று நேரம் கழித்து, பொதுமக்கள் அதிர்ச்சியுடன் அந்த மர்ம பொருளின் அருகில் சென்று பார்த்தனர். அந்த பொருள் சுமார் 10 கிலோ எடையில் உருளை வடிவிலான தோற்றம் உடைய பொருளாக இருந்தது.
இந்த தகவல் காட்டுத் தீ போல அந்தப்பகுதி முழுவதும் பரவியது. இதனால் சிவகிரி, கொளந்த பாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து ஏராளமானோர் அந்த விசித்திர உருளையை பார்க்க மோதுபட்டி கிராமம் நோக்கி விரைந்தனர்.
மேலும் இதுபற்றிய தகவல் அறிந்ததும் தென்னிலை நில வருவாய் அலுவலர் ரமேஷ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் துரைசாமி, முனியப்பன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று, அந்த பொருளை பார்வையிட்டனர்.
மர்ம பொருள் குறித்து உயர் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அதையடுத்து, வானில் இருந்து விழுந்த மர்ம பொருள் அங்குள்ள ஒரு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அந்த பொருள் பறக்கும் தட்டாக இருக்குமா? அல்லது ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் உடைந்த பாகமா? என்று தெரியவில்லை.
இது குறித்து அதிகாரிகள் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருள் குறித்து ஆய்வு செய்வதற்காக கரூர் வருகின்றனர். அவர்கள் வந்து ஆய்வு செய்த பின்னர் தான் மர்ம பொருள் குறித்த விவரம் தெரியவரும்.
இந்த மர்ம பொருளால் அந்த பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது