சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வானஅறுபத்து மூன்று நாயன்மார்கள் வீதி உலா இன்று கோலாகலமாக நடந்தேறியது.

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடந்துமுடிந்தது. கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் திருத்தேரில் எழுந்தருளினார். பங்குனித் திருவிழாவின்  முக்கிய அம்சமாக  விழாவின்  எட்டாம் நாளில்  இன்று காலையில்  திருஞானசம்பந்தர்  சுவாமிகள்  எழுந்தருளல்  நிகழ்ச்சியும், தொடர்ந்து   அங்கம்  பூம்பாவையாக்கி  அருளுதல்  நிகழ்ச்சியும்  நடந்தது.

அறுபத்து  மூவர்  திருவிழா  முக்கிய  நிகழ்ச்சியான அறுபத்து  மூவர்  திருவிழா  இன்று  மதியம்  3  மணிக்கு  நடந்தது.  நாயன்மார்கள்  பல்லக்குக்கு  முன்பாக மயிலாப்பூர் காவல்தெய்வம் கோலவிழி அம்மன், விநாயகர், கபாலீசுவரர், கற்பகாம்பாள், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேசுவரர் மற்றும் முண்டககண்ணியம்மன், அங்காளபரமேஸ்வரி, வீரபத்திரர் சுவாமிகள் தனித்தனி பல்லக்குகளில்எழுந்தருளினர்.
கோலவிழியம்மன் முன்னே வரத் தொடர்ந்து விநாயகர் சப்பரத்தில் வருகைதந்தார். சப்பரத்தில் அறுபத்து மூவர் 63 நாயன்மார்கள் மாட வீதிகளில் உலா வந்தனர். பல்லக்குகள் முக்கிய வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்துஅடைந்தது.

பெருந்திரளாக கூடிய பக்தர்கள் இறைவனைத் தரிசித்தனர். மாட வீதிகளில் வீதி உலா இந்தச் சப்பரங்களுடன் திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் தனித்தனியாக பெரும் பல்லக்குகளில் நான்கு மாட வீதிகளைவலம் வந்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் கபாலி கபாலி என்று பக்தி மிளிர முழக்கமிட்டனர்.

கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளினர்.
இந்த விழாவில் சென்னை மற்றும் அண்டை மாவட்ட மக்களும் பெருந்திரளாக கலந்துகொண்டனர். மாட வீதிகளில்பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடினர். மோர், பால், புளியோதரை, வெஜிடபிள் பிரியாணி என்று பத்தடிக்கு ஒருஅன்னதானம் நடந்துகொண்டே இருந்தது.

மேலும், மண்பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து கடவுளுக்கு அர்ச்சனை செய்து பக்தர்களுக்கு வழங்குவதும் நடந்தது.