சென்னை: பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பங்குனித் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. காலை 7.30 மணி அளவில் தொடங்கிய திருத்தேர், 4 மாட வீதிகளையும் சுற்றி இன்று பிற்பகல் நிலைக்கு வந்தடையும்.

சென்னையில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி பெருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. . இந்த ஆண்டுக்கான பங்குனி பெருவிழா  ஏற்கனவே கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி, சவுடல் விமானம் உள்ளிட்ட வாகனங்களில் மாட வீதிகளில் சுவாமி உலா வந்து அருள்பாலித்தனர்.

இதைத்தொடர்ந்து பங்குத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்று வருகிறது. தேர் பவனியையொட்டி,  காலை 6.30 மணி அளவில் திருத்தேருக்கு கபாலீஸ்வரர், கற்பகாம்பாள் எழுந்தருளினர். காலை 7.30  மணி அளவில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க, தேரோட்டம் தொடங்கியது.

வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள், பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர். மாடவீதிகளில் தேர் வலம் வந்துகொண்டிருக்கிறது. கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் தேர்த்திருவிழாவை காண பல ஆயிரம் பக்தர்கள் மயிலையில் குவிந்துள்ளனர். இதனால், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார்பாதுகாப்பில் ஈடுபட்டி வருகின்றனர்.

தேர்த்திருவிழாவையொடி, தனியார் அமைப்புகள் மூலம் சாலையோரத்தில் பந்தல்கள் அமைக்கப்பட்டு, பக்தர்களுக்கு நீர்மோர், பானகம் வழங்கப்பட்டு வருகின்றன.

இதையடுத்து நாளை  63 நாயன்மார்களோடு இறைவன் காட்சி தரும் அறுபத்து மூவர் விழா வழக்கமான உற்சாகத்துடன் வீதி உலா நடைபெற உள்ளது. நாளை மதியம்  தொடங்கி நடைபெற உள்ளது. இது முடிவடைய நள்ளிரவு ஆகும். அதைத்தொடர்ந்து, மாா்ச் 18-ஆம் தேதி சுந்தரேசுவரா் திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன. அதற்கு அடுத்த  விழா நிறைவு திருமுழுக்கும் நடைபெற உள்ளது.