சென்னை: கடந்த மாதம் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே உள்ள  ஜன்னல் பஜ்ஜி கடை குறித்த வதந்திகள் பரவிய நிலையில், கொரோனா காரணமாக அடைக்கப்பட்டிருந்த கடை தற்போது மீண்டும் வியாபாரத் துக்காக திறக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் மயிலாப்பூர் கபாலிஸ்வரர் கோவில் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பிரபலமானது  ஜன்னல் பஜ்ஜி கடை. சட்னி  உடன் சுவையான பஜ்ஜி  இந்த கடையில் சுவை மிக்கது மட்டுமின்றி மயிலை மக்கள் மட்டுமின்றி கோவிலுக்கு வருவோரிடமும் புகழ் பெற்றது. சாதாரண நாட்களில் கூட காலை, மாலை ஜன்னல் அருகே நின்று, காலை சிற்றுண்டிக்கும், மாலை சட்னியுடன் கூடிய பஜ்ஜியை ருசிப்பதற்கும், பலர் குடும்பதோடு வருவதும் வாடிக்கை.

ஆனால், கொரோனா தொற்று காரணமாக  இந்த  கடையின் உரிமையாளர் சந்திரசேகரன்  உயிர் இழந்ததாகத்  கடந்த ஜூலை மாதம் தகவல்கள் பரவின. ஆனால், வதந்தி என்று ஜன்னல் கடை உரிமையாளர்  மறுப்பு தெரிவித்ததுடன், தனது இளைய சகோதரர்தான் இறந்ததாக கூறினார்.   இதையடுத்து கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பஜ்ஜி கடையும் அடைக்கப்பட்டிருந்தது.

தற்போது, பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருப்பதால், ஜன்னல் பஜ்ஜி கடை எப்போதும் போல திறக்கப்பட்டு உள்ளது. வாடிக்கையாளர்கள் ஜன்னலை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.